மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்

கோவை : கோவையில் நடைபெற்று முடிந்த தி.மு.க., பொதுக்குழுவில் ஆளும் அ.தி.மு.க., மற்றும் மத்தியில் ஆளும் காங்., கூட்டணி அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் பல தீர்மானங்கள் காட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள்: அ.தி.மு.க.,வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: எமர்ஜென்சியை நினைவுப்படுத்தும் அளவுக்கு, போலீசாரை ஏவி தி.மு.க.,வினர் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன.
அ.தி.மு.க., அரசின் அடக்குமுறை தர்பார், அராஜக நடவடிக்கைகள், பழி வாங்கும் நோக்கத்துடன் தொடுக்கும் பொய் வழக்குகளை கண்டித்து, தமிழகம் முழுவதும், ஆகஸ்டு திங்கள் முதல் ஆர்ப்பாட்ட அறப்போர் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்க, இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும். ஈழத்தமிழர்களின் உரிமை காத்திட, அவர்களிடம் பொது ஓட்டெடுப்பு நடத்தி ஓர் அரசியல் தீர்வுக்கு வழி காண வேண்டும்.
நில அபகரிப்பு: நில அபகரிப்பில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை, 2006-2011டன் நின்று விடாமல், 2006க்கு முந்தைய காலங்களில் நடைபெற்ற மோசடிகளுக்கும் எடுக்கப்பட வேண்டும். சிறுதாவூர் தலித் மக்களிடம் மோசடியாக பறிக்கப்பட்ட நிலத்தை அவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசு அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி டீசல், பெட்ரோல், சமையல் காஸ் விலையை உயர்த்தி, அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வுக்கு காரணமாகி வருகிறது. ஆகவே டீசல், பெட்ரோல், சமையல் காஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்.
தலைமைச் செயலக மாற்றம்: அனைவராலும் பாராட்டப்பட்ட, புதிய தலைமை செயலகத்தை பயன்படுத்தாமல், மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றியிருப்பதையும், புதிய தலைமை செயலக கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்து, விசாரணை கமிஷன் அமைத்திருப்பதையும் கண்டிக்கிறோம்.
அண்ணா பல்கலை மாற்றம்: சென்னை அண்ணா பல்கலையின் பணிச்சுமையை குறைக்க, தி.மு.க., ஆட்சியில் திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரை நகரங்களில் புதிதாக அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் ஏற்படுத்தப்பட்டன. புதிதாக அமைந்துள்ள அ.தி.மு.க., அரசு, புதிய பல்கலைகளை கலைத்து விட்டு, அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் சென்னை அண்ணா பல்கலையுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித் தரமும் ஆராய்ச்சியும் குறையும்.
வரியை குறைக்கணும்: ஜவுளித்துறை மீது வரியை விதித்து விட்டு, தற்போது விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்திருப்பது, அ.தி.மு.க.,வின் அவசர முடிவு. இதை கண்டிப்பதோடு, மீதமுள்ள பிரிவுகளின் மீது உயர்த்தப்பட்ட வரிகளையும் கைவிட வேண்டும்.
மாநில மொழியில் கோர்ட் தீர்ப்பு: மத்திய ஆட்சி மொழிகள் பற்றி ஆராய உடனடியாக குழு அமைக்க வேண்டும். அனைத்து கோர்ட் நடவடிக்கைகளையும், தீர்ப்புகளையும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும் வெளியிட வேண்டும். அனைத்து ஐகோர்ட்டுகளிலும் சுப்ரீம் கோர்ட்டுகளிலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலவை ரத்துக்கு கண்டனம்: சட்டசபை மேலவை கொண்டு வர தி.மு.க., தீர்மானம் நிறைவேற்றிய ஒரே காரணத்தால், மேலவை தேவையில்லை என்று அ.தி.மு.க., அரசு குறுகிய எண்ணத்துடன் எடுத்துள்ள முடிவை கண்டிக்கிறோம்.
மகளிர் இட ஒதுக்கீடு: பார்லிமென்ட், சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
மாநில சுயாட்சி: மாநிலத்தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் உருவாகி, கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.
முல்லைப் பெரியாறு: முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட, மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேது சமுத்திர திட்டம்: மீனவர் பொருளாதாரம், கடலோர பாதுகாப்பு, தென் மாவட்ட வளர்ச்சிக்கு உதவும் சேது சமுத்திர திட்டத்தின் மீதமுள்ள பணிகளை முடித்து, திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
கான்கிரீட் வீடு: மக்கள் வாழ்வுரிமைக்கு ஆதாரமான நிரந்தர கான்கிரீட் வீடுகளை வழங்க தி.மு.க., அரசு திட்டமிட்டது. இத்திட்டத்தை கைவிட்ட ஜெயலலிதா நடவடிக்கையை கண்டிக்கிறோம். இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


