பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையங்களில் விஜிலென்ஸ் சோதனை : "தினமலர்' செய்தி எதிரொலி
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையங்களில் விஜிலென்ஸ் சோதனை : "தினமலர்' செய்தி எதிரொலி
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையங்களில் விஜிலென்ஸ் சோதனை : "தினமலர்' செய்தி எதிரொலி
சென்னை : பி.எஸ்.என்.எல்., வருவாயை தடுக்கும் வகையில், முகவர்களுடன் கைகோர்த்து அதிகாரிகள் செயல்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வாடிக்கையாளர் சேவை மையங்களில் விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த முகவர்கள், வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு நேரடியாக வருபவர்களை வழிமறித்து விற்பனை செய்வது உள்ளிட்ட பல முறைகேடுகளை, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளுடன் சேர்ந்து ஈடுபடுவதால் நிர்வாகத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக, நேற்று 'தினமலர்' செய்தி வெளியிட்டது. இந்த முறைகேடுகளில் ஈடுபடும், பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் மற்றும் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், வாடிக்கையாளர் சேவை மையங்களில் அதிரடி ரெய்டு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், முறைகேடு குறித்து செய்தி வந்ததும், சென்னை ராயபுரம் கல் மண்டபம், அம்பத்தூர், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சேவை மையங்களில் நேரடி முகவர்கள் செய்யும் அடாவடிகள் குறித்து, பி.எஸ்.என்.எல்., 'விஜிலென்ஸ்' பிரிவுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத 'விஜிலென்ஸ்' அதிகாரி ஒருவர் கூறியதாவது: நேரடி விற்பனை முகவர்கள், முறைகேடுகளில் ஈடுபடுவதாக வந்துள்ள செய்தியின் அடிப்படையில், அது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும். வாடிக்கையாளர் சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்தி, முறைகேடுகளில் அதிகாரிகளும் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் மற்றும் முகவர்கள் கூட்டம் நேற்று மாலை அவசரமாகக் கூடியது. அதில், முறைகேடுகளில் ஈடுபட்ட இருவர் இத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டனர். 'இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் நேரடி முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


