/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சி நகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்புகாஞ்சி நகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு
காஞ்சி நகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு
காஞ்சி நகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு
காஞ்சி நகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு
ADDED : செப் 16, 2011 03:52 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகராட்சியில், வரி வசூல் முறையாக நடைபெறாததால், நகராட்சிக்கு ஏற்பட்ட வருமான இழப்பை, அதிகாரிகளிடமிருந்து வசூலிக்க, நடவடிக்கை எடுக்கும்படி, தணிக்கை அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் நகராட்சியில், பணிகள் முறையாக நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கதையாக உள்ளது. நகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. நகராட்சியில் நடைபெறும் தவறுகள், தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆனால், தணிக்கை அறிக்கை விவரம் மக்களுக்கு தெரிவதில்லை.இச்சூழலில், காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான குப்பன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 2008-09ம் ஆண்டு தணிக்கை அறிக்கையை வாங்கி உள்ளார். அதில், பல குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றின் விவரம் வருமாறு:
கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி, வசூல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லாத இனங்களின் வசூல் நிலுவைத் தொகை அதிகமாக உள்ளது.சொத்துவரி, நூலக வரியுடன் சேர்த்து, 5 கோடியே 12 லட்சத்து 946 ரூபாய், தொழில் வரி 6 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 41 ரூபாய், கேபிள் கட்டணம் 75 லட்சத்து 57 ஆயிரத்து 869 ரூபாய், குத்தகை இனங்கள் ஒரு கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 957 ரூபாய், குடிநீர் கட்டணம் ஒரு கோடியே 15 லட்சத்து 70 ஆயிரத்து 337 ரூபாய், வடிகால் கட்டணம் 88 லட்சத்து 47 ஆயிரத்து 523 ரூபாய் என, 16 கோடியே 24 லட்சத்து 28 ஆயிரத்து 674 ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது. இத்தொகை அதிகமாக உள்ளதால், தனிக்கவனம் செலுத்தி வசூல் செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த நிலுவைகள், 1977-78ம் ஆண்டிலிருந்து உள்ளதால், சிறப்பு அறிவிக்கைகள், நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிலுவைத் தொகைகளை விரைவாக வசூல் செய்ய வேண்டும்.
மார்க்கெட் கட்டணம், பஸ் நிலைய கட்டணம், ஆடு தொட்டி கட்டணம், வணிக வளாகங்கள், நிலங்கள் வாடகை, கட்டணக் கழிப்பிடங்கள், பயணியர் மாளிகை ஆகியவற்றில் 2 கோடியே 41 லட்சத்து 24 ஆயிரத்து 513 ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது. நிலுவைத் தொகை ஆண்டுதோறும் அதிகரித்தபடியே உள்ளது.ஆறு பஸ் நிலைய 'பங்க்' கடை உரிமையாளர்களில், 4 பேர், ஐந்து தனியார் இரும்பு 'பங்க்'குகளில் 4 பேர், பஸ் நிலைய நுழைவு வாயில் கடைகளில், 6 குத்தகைதாரர்கள், சாலைத் தெருவில் உள்ள கடைகளில், இரண்டு குத்தகைதாரர்கள், காவலான் தெருவில் உள்ள கடையில், மூன்று குத்தகைதாரர்கள், ரயில்வே ரோடு கடைகளில் நான்கு குத்தகைதாரர்கள், ராஜாஜி சந்தை நீர்தேக்கத் தொட்டி கடைகளில், இரண்டு குத்தகைதாரர்கள், அண்ணா வணிக வளாக மேல் மாடி கடைகளில், 13 குத்தகைதாரர்கள், ஒரு மாதம் கூட வாடகை செலுத்தவில்லை.
அவற்றை வசூல் செய்ய வருவாய் அலுவலர், உதவி வருவாய் அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள், வருவாய் உதவியாளர்கள் சிறிதும் அக்கறை இல்லாமல் இருப்பது, உயர் நிர்வாக அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தின்படி, வரிகள் வசூல் செய்யப்பட வேண்டிய காலத்திலிருந்து, 6 ஆண்டுகளுக்குள் வசூலிக்கப்படாவிட்டால், அவை காலம் கடந்த நிலுவையாகும். அவற்றை சட்ட ரீதியாக வசூலிக்க இயலாது. அதேபோல், மூன்று ஆண்டு குத்தகைகள் மூன்றாவது ஆண்டின் இறுதியிலும், ஓராண்டு குத்தகைகள் அவ்வாண்டு இறுதியிலும், காலம் கடந்தவையாகின்றன. அவற்றையும் சட்டரீதியாக வசூலிக்க இயலாது.
அதன்படி 1996-97ம் ஆண்டு சொத்து வரி 54 லட்சத்து 69 ஆயிரத்து 324 ரூபாய், தொழில் வரி 12 லட்சத்து 50 ஆயிரத்து 852 ரூபாய், 2004-05ம் ஆண்டு மூன்று ஆண்டு குத்தகை இனங்களான வணிக வளாக கடைகளில், 8 லட்சத்து 90 ஆயிரத்து 313 ரூபாய், 2008-09ம் ஆண்டு ஓராண்டு குத்தகை இனங்களான, மார்க்கெட் கட்டணம், பஸ் நிலைய கட்டணம், ஆடு வதை கட்டணம், நிலங்கள் குத்தகை, கட்டணக் கழிப்பிடம், பயணியர் மாளிகை ஆகியவற்றில், 22 லட்சத்து 39 ஆயிரத்து 145 ரூபாய் காலம் கடந்தவைகளாகின்றன.இவற்றை, உரியவர்களிடமிருந்து வசூலிக்காமல், காலம் கடக்க விட்டு இழப்பு ஏற்படக் காரணமாக இருந்த, வருவாய் உதவியாளர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடமிருந்து 30 சதவீதம், உதவி வருவாய் அலுவலர் மற்றும் மேலாளரிடமிருந்து 15 சதவீதம், இருக்கை உதவியாளரிடமிருந்து 20 சதவீதம், கமிஷனரிடமிருந்து 5 சதவீதம் வசூலிக்கவோ, ஈடு செய்யவோ, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, கவுன்சிலர் குப்பன் கூறியதாவது:நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகள், தணிக்கை அறிக்கையில், முழுமையாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
சட்டப்படி தணிக்கை அறிக்கை, கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நகராட்சி அதிகாரிகள் ஒரு ஆண்டு கூட தணிக்கை அறிக்கை வழங்கியதில்லை.
முறைகேடுகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தேன். அதிகாரிகள் தரவில்லை. மேல் முறையீடு செய்து, 2008-09ம் ஆண்டு தணிக்கை அறிக்கையை பெற்றுள்ளேன். அடுத்து, 2009-10ம் ஆண்டு தணிக்கை அறிக்கை, இன்னும் வழங்கவில்லை. தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை, அதிகாரிகள் திருத்திக் கொள்வதில்லை. வருவாய் இழப்பிற்கு காரணமானவர்கள் மீது, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.