'குரூப் - 4'ல் மதம் குறித்த கேள்வி: ஹிந்து முன்னணி கடும் கண்டனம்
'குரூப் - 4'ல் மதம் குறித்த கேள்வி: ஹிந்து முன்னணி கடும் கண்டனம்
'குரூப் - 4'ல் மதம் குறித்த கேள்வி: ஹிந்து முன்னணி கடும் கண்டனம்
ADDED : ஜூன் 12, 2024 06:54 AM

திருப்பூர் : தமிழகத்தில் நடந்த குரூப்-4 தேர்வில் மதம் தொடர்பாக இடம்பெற்றுள்ள கேள்விக்கு, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: கடந்த 9ம் தேதி குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. வினாத்தாளில் முதல் கேள்வியே, 'இயேசு கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார்?' என்று கேட்கப்பட்டுள்ளது. இவ்வினாவுக்கு, கிறிஸ்துவர்கள் மட்டுமே சரியான விடையை தேர்வு செய்திருப்பர். இதனால், ஹிந்து இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிக்கும் நோக்கத்தில், வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.
இந்த வினா, தமிழ் மொழி பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி சார்ந்த ஆயிரமாயிரம் பண்டைய நுால்கள் தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் உள்ளன. அவற்றை பாடத்திட்டத்தில் இருந்து புறந்தள்ளி, கிறிஸ்துவ மதம் சார்ந்த பாடங்கள் மற்றும் திராவிட புரட்டுக்கள் பாடங்களாக சேர்க்கப்பட்டு, வரலாற்றை அழிக்கும் வேலையை தமிழக அரசு செய்து வருகிறது.
அரசு பணியாளர் தேர்வுக்கான போட்டி தேர்வில், இயேசு கிறிஸ்துவின் வருகை என்று கேள்வி எழுப்புவதும் கடும் கண்டனத்துக்குரியது. எனவே, தி.மு.க., அரசு சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காக, தமிழர்களின் அடையாளத்தை, பண்பாட்டை அழிக்கும் விதமாக செயல்பட கூடாது.
மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்க கூடாது. நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.