காலை நேரம், 'டிவி'யை, 'ஆன்' செய்தாலே போதும், 'தீராத நோயில்லை, என்னால் தீர்க்க முடியாத நோயில்லை' என, தெம்மாங்கு பாடும் டாக்டர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
படித்தவர்கள் அதிகம் உள்ள, சென்னை, மயிலாப்பூரில் கிளினிக் நடத்தி, 'டிவி'யில் தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொண்டிருந்த டாக்டர் ஒருவர், தீர்க்க முடியாத நோயை குணப்படுத்துவதாகக் கூறி, பல ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததால், இப்போது குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளார். இவரைப் போன்று கைது செய்யப்பட வேண்டிய போலி டாக்டர்கள் ஏராளம் உள்ளனர்.
இந்திய டாக்டர்கள் சங்கம் கொடுத்த புகாரின் பேரில், கடந்த ஆண்டு, 2,000 போலி டாக்டர் கைது செய்யப்பட்டனர். இதில், பலர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். குணமாக்கவே முடியாத நோய்கள் என, 43 நோய்கள், 'மேஜிக் ரெமிடி ஆக்ட்' சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நோய்களைக் குணப்படுத்த முடியும் என, எந்த டாக்டரும் கோர முடியாது. அப்படி கூறுவது சட்டப்படி குற்றம். ஆனால், 'டிவி'யில் விளம்பரம் செய்யும் டாக்டர்கள் பலர், இந்த நோய்களைக் குணப்படுத்துவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்.
இப்படி விளம்பரம் செய்வதும், மருத்துவச் சட்டப்படி குற்றம். கேபிள் சட்டப்படி, இது போன்ற விளம்பரங்களை ஒளிபரப்புவதும் குற்றம். ஆனால், சட்டங்களையும், விதிகளையும் யாரும் கண்டுகொள்வதில்லை.
எல்லா மருத்துவர்களிடமும் சென்று, குணமாகாமல் விரக்தியில் இருக்கும் நோயாளிகள் தான் இவர்களது இலக்கு. குறிப்பாக, குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், மூளை வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கு பொன் முட்டையிடும் வாத்துக்கள்.
தமிழகம் முழுவதும், 30 ஆயிரம் போலி டாக்டர்கள் இருப்பதாக, தன்னார்வ அமைப்பின், புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆனால், யார் போலி டாக்டர்கள் என்பது இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கிளினிக் நடத்தி வருபவர்களில், போலிகளை வடிகட்டுவது மிகவும் சிக்கலான பிரச்னை.
கிராமப்புறங்களில் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பாரம்பரியமாக வைத்தியம் செய்பவர்களை, அங்கீகரிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, 1970ம் ஆண்டு, தமிழகம் முழுவதும் 2,350 பேர், 'ஆர்.ஐ.எம்.பி., - ஆர்.எச்.எம்.பி.,' என, பதிவு செய்து கொண்டனர். இவர்களில், பலர் இப்போது உயிருடன் இல்லை. ஆனால், அவர்களது பெயரில், வாரிசுகள் அல்லது உறவினர்கள், உதவியாளர்கள், கிளினிக் நடத்தி வருகின்றனர். இவர்களில் பலர், மருத்துவம் பற்றி அரைகுறையாக தெரிந்து கொண்டு, பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு வைத்தியம் செய்து வருகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -