2023 ஜூனில் 300 பேர்: 2024 ஜூனில் 9 பேரை காவு வாங்கிய ரயில் விபத்துகள்!
2023 ஜூனில் 300 பேர்: 2024 ஜூனில் 9 பேரை காவு வாங்கிய ரயில் விபத்துகள்!
2023 ஜூனில் 300 பேர்: 2024 ஜூனில் 9 பேரை காவு வாங்கிய ரயில் விபத்துகள்!
UPDATED : ஜூன் 17, 2024 11:33 PM
ADDED : ஜூன் 17, 2024 04:12 PM

புதுடில்லி: கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 300 பேர் உயிரிழந்தனர். இந்தாண்டும் ஜூன் மாதம், இன்று (ஜூன் 17) மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக, ரயில்கள் விபத்தில் சிக்கி, துயரத்தை ஏற்படுத்தி வருகிறது. மேற்கு வங்கத்தில் இன்று (ஜூன் 17) பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். 40 பேர் பலத்த காயமுற்றனர். ஜூன் மாதம் என்றாலே இந்தியாவில் ரயில் விபத்துக்கள் நடக்கிறது. கடந்த 2023ம் ஆண்டும் ஜூன் 2ம் தேதி ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 300 பேர் உயிரிழந்தனர். 1200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
மனதை உலுக்கிய ரயில் விபத்துக்கள்;
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 7 மோசமான ரயில் விபத்துகள் அரங்கேறி உள்ளது. இதன் விபரம் பின்வருமாறு:
* 2023ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி ஒடிசாவில் பாலசோர் பகுதியில் நடந்த ரயில் விபத்தில் 300 பேர் உயிரிழந்தனர். 1,200க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
* 2016ம் ஆண்டு இந்தூர்- பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூர், புக்ராயன் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.
* 2010ம் ஆண்டு மேற்கு மிட்னாபூர் அருகே மும்பை நோக்கிச் சென்ற ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மீது மோதி சுமார் 148 பேர் உயிரிழந்தனர்.
* 2022ம் ஆண்டு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 140 பயணிகள் உயிரிழந்தனர்.
* 1999ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இரண்டு அதிவேக ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு ரயில்களில் 2500க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். 290 பேர் உயிரிழந்தனர்.
* 1998ம் ஆண்டு பஞ்சாபில் தடம் புரண்ட ரயிலில், சீல்டா எக்ஸ்பிரஸ் மோதியதில் 210 பேர் உயிரிழந்தனர்.
* 1995ம் ஆண்டு ஆக்ரா அருகே பெரோசாபாத்தில் காளிந்தி எக்ஸ்பிரஸ் மற்றும் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மோதியதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.