ADDED : ஜூலை 25, 2011 10:37 PM
பனாஜி:'கோவாவில் உள்ள கடற்கரைகளில், இரவு நேரத்திலும் கண்காணிப்பு செய்திட, சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்படுகின்றன' என, மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலம் கோவா.
இங்கு, ஆண்டுதோறும், 24 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். இவர்களில், 4 லட்சம் பேர் வெளிநாட்டவர்கள். சமீபகாலமாக, கோவா வரும் சுற்றுலாப் பயணிகள் மீதான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக, மாநிலத்தில் உள்ள, 30க்கும் மேற்பட்ட கடற்கரைகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த, சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.கோவா சுற்றுலாத்துறை இயக்குனர் சுவப்னில் நாயக் இதுகுறித்து கூறியதாவது:உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் நோக்கில், மாநிலத்தில் உள்ள கடற்கரைகளில், இரவு நேரத்திலும் கண்காணிப்பு செய்ய உதவும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இந்த சி.சி.டி.வி., கேமராக்கள் அகச்சிவப்புக் கதிர்கள் (இன்ப்ரா ரெட்) தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டவை என்பதால், மிகக்குறைந்த வெளிச்சத்திலும் இவற்றால், உருவங்களை தெளிவாகப் பதிவு செய்ய முடியும்.கோவா முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்கள் உட்பட சுற்றுலாப் பயணிகள் அலைமோதும் எல்லா இடங்களிலும், இந்த சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்படும். முதற்கட்டமாக, காலங்குடா, பாகா, கோல்வா, ஆரம்போல் உள்ளிட்ட கடற்கரைகளில், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதற்காக, சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒப்பந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.இவ்வாறு சுவப்னில் நாயக் கூறினார்.