திருச்சி திரும்வெறும்பூர் இணைப்பு செல்லும் : ஐகோர்ட் உத்தரவு
திருச்சி திரும்வெறும்பூர் இணைப்பு செல்லும் : ஐகோர்ட் உத்தரவு
திருச்சி திரும்வெறும்பூர் இணைப்பு செல்லும் : ஐகோர்ட் உத்தரவு

சென்னை : திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்தது செல்லாது என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: இணைப்பு தொடர்பான அறிவிப்பாணையை, பத்திரிகையில் வெளியிட வேண்டும் என, தனி நீதிபதி முடிவுக்கு வந்துள்ளார். மாநகராட்சி சட்டத்தின்படி, இணைப்பு தொடர்பான அறிவிப்பாணையை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்ற தேவையில்லை.
திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பு தொடர்பான நடவடிக்கைகள், 2007ம் ஆண்டே துவங்கிவிட்டது. திருவெறும்பூரில், 30 ஆண்டுகளாக வசிக்கும் மனுதாரருக்கு, இதுகுறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும். திருவெறும்பூர் பேரூராட்சியை இணைப்பது என, மாநகராட்சி முடிவெடுத்த ஒரு ஆண்டுக்குப் பின், கோர்ட்டை மனுதாரர் அணுகியுள்ளார்.
மனுவை கடந்த மாதம் 27ம் தேதி தாக்கல் செய்துள்ளார். அறிவிப்பாணை கடந்த ஜனவரி 3ம் தேதி, கெஜட்டில் வெளியிடப்பட்டுவிட்டது. கோர்ட்டை முன்கூட்டி ஏன் அணுகவில்லை என்பதற்கு, மனுவில் எந்த விளக்கமும் இல்லை.
திருவெறும்பூர் பேரூராட்சியை, திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பான நடவடிக்கையை, முதலில் அரசு தான் துவங்கியது. தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையில், எந்த குறைபாடும் இல்லை. மாநகராட்சி மறுவரையறை தொடர்பான உத்தரவு, கெஜட்டில் வெளியிடப்பட்டு விட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது.
இந்த ரிட் மனு, தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்பீல் மனு ஏற்கப்படுகிறது; தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.