நெல் கொள்முதல் முறைகேடு புகார்; விவசாயிகளுடன் அதிகாரிகள் சமரசம்
நெல் கொள்முதல் முறைகேடு புகார்; விவசாயிகளுடன் அதிகாரிகள் சமரசம்
நெல் கொள்முதல் முறைகேடு புகார்; விவசாயிகளுடன் அதிகாரிகள் சமரசம்
ADDED : மே 27, 2025 03:18 AM

சென்னை: நெல் கொள்முதலில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்த நிலையில், விவசாயிகளுடன், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் சென்னையில் நேற்று பேச்சு நடத்தினர். அதில், விவசாயிகள் தெரிவித்த புகார்கள் மீது, விரைவில் தீர்வு காண்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், விவசாயிகளிடம் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இதில் முறைகேடு நடப்பதாக, விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை கோயம் பேடில் உள்ள, வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில், மேலாண் இயக்குநர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் சங்கத்தினருடன் நேற்று பேச்சு நடத்தினர்.
பின், தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டி:
நெல் கொள்முதலில் நடந்த முறைகேடு குறித்து, வாணிபக் கழக மேலாண் இயக்குநர் அலுவலகத்தை நாளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தோம்.
இதையடுத்து, அரசு பேச்சு நடத்த அழைப்பு விடுத்தது. நெல் கொள்முதல் செய்ய தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தில் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்தினர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, 40 கிலோ நெல் மூட்டைக்கு, 65 ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர்.
கொள்முதல் செய்வதற்கு கட்டமைப்போ, பணியாளர்களோ இல்லாத அந்நிறுவனம், விவசாயிகளிடம் வாங்கிய நெல்லுக்கு, 500 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.
இதனால், விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
பல இடங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டும், அதற்கான ரசீது விவசாயிகளுக்கு வழங்கப் படவில்லை.
நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளன. எனவே, விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகைக்கும், வாணிபக் கழகம் பொறுப்பேற்க வலியுறுத்தினோம்.
'நெல் கொள்முதல் செய்வதற்கு தனியாரை இனி அனுமதிப்பது இல்லை' என்ற கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும், அதை அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதாகவும், மேலாண் இயக்குநர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை, 10 நாட்களுக்குள் வாணிபக் கழகம் பொறுப்பேற்று வழங்கும் என, உறுதி அளித்தார். அதை ஏற்று, நாளை நடக்க இருந்த போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.