சம்பளத்தை தவிர வேறு பணத்தை பெறுவது ஊழல் தான்! புதிய வழிகாட்டுதல் பட்டியல் வெளியீடு
சம்பளத்தை தவிர வேறு பணத்தை பெறுவது ஊழல் தான்! புதிய வழிகாட்டுதல் பட்டியல் வெளியீடு
சம்பளத்தை தவிர வேறு பணத்தை பெறுவது ஊழல் தான்! புதிய வழிகாட்டுதல் பட்டியல் வெளியீடு
ADDED : மே 27, 2025 03:24 AM

புதுடில்லி: பொதுத் துறை வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊழல் வழக்குகளில், முறைகேடுகள் எவை என்பதை தீர்மானிக்கும் புதிய வழிகாட்டுதல்களை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டது.
நாட்டின் ஊழல் கண்காணிப்பு நிறுவனங்களில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் முக்கியமானது. மத்திய அரசு துறைகளில் நடைபெறும் ஊழல்களை கண்காணித்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கிறது.
தன் கண்காணிப்பு வளையத்தில் உள்ள அரசு நிறுவனங்கள், ஊழியர்களுக்கான விதிகளை அவ்வப்போது ஆணையம் வெளியிடுகிறது.
சுற்றறிக்கை
இதன்படி, மத்திய அரசின் அனைத்து துறை செயலர்கள், பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மே 23ல் அனுப்பியது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆணையத்தால் இதற்கு முன் அனுப்பிய வழிகாட்டுதல், உத்தரவு, சுற்றறிக்கை அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அந்த விதிகள் அனைத்தும் இந்த முதன்மை சுற்றறிக்கையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
வங்கிகளில் போலி கணக்கு, வங்கி சொத்து, பணத்தை முறைகேடாக பயன்படுத்துதல், வங்கி ஆவணங்களை மோசடி செய்தல் போன்றவை முறைகேடுகளின் கீழ் வரும். வங்கி நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்காவிட்டாலும், வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தினாலும், அவை முறைகேடுகளே.
வங்கிகளின் ரகசியம் தொடர்பான விவகாரம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் வரம்புக்குள் வராவிட்டாலும், வங்கியின் ரகசியத்தை ஊழியர்கள் வெளியிடுவது, ஊழல் கண்காணிப்பில் வரும்.
முறைகேடு
அதிகாரத்தை பயன்படுத்தி சட்டப்பூர்வ சம்பளத்தை தவிர வேறு பணத்தை பெறுவது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வைத்திருப்து போன்றவை ஊழல் தான்.
பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களை பொறுத்தவரை, அதிகபட்ச தொகையை உரிமை கோருதல், காப்பீடு வழங்குவதற்காக ஆபத்தை ஏற்பது போன்றவையும் ஊழல் கண்காணிப்பில் வரும்.
மருத்துவக் காப்பீட்டில் டாக்டர்கள், மருத்துவமனைகள், ஏஜென்டுகள், வழக்கறிஞர்கள் ஆகியோருடன் சேர்ந்து மருத்துவ பரிசோதனையில் கூட்டுச்சதி செய்வது, காப்பீடு நிறுவன ஊழியர்களால் திட்டமிட்டே, தவறான காப்பீடு நடைமுறைகளை கையாளுவதும் முறைகேடு கண்காணிப்பில் வரும்.
அதிகாரிகளும் இதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
இவ்வாறு ஆணையம் தெரிவித்துள்ளது.