Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மாஜி அமைச்சரின் சகோதரர் மீது துணை நடிகர் புகார்

மாஜி அமைச்சரின் சகோதரர் மீது துணை நடிகர் புகார்

மாஜி அமைச்சரின் சகோதரர் மீது துணை நடிகர் புகார்

மாஜி அமைச்சரின் சகோதரர் மீது துணை நடிகர் புகார்

ADDED : ஜூலை 26, 2011 01:03 AM


Google News
Latest Tamil News

சென்னை : கொலை செய்யும் முயற்சியுடன் தாக்கியதுடன், நகை, பணத்தை பறித்துச் சென்ற மாஜி தி.மு.க., அமைச்சர் சாமியின் சகோதரர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, துணை நடிகர் ஒருவர், போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார்.

சென்னை, தண்டையார்பேட்டை, தண்டையார் நகர் மெயின் தெருவில் வசித்து வருபவர் பரணீதரன், 35; துணை நடிகர். இவர், நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் விவரம்: நான், கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி, சொந்த வேலை காரணமாக இரவு 8.45 மணிக்கு திருவொற்றியூர், கே.வி.கே. குப்பம் கடலோரப் பகுதியில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, அதே பகுதியைச்சேர்ந்த, அப்போதைய மீன்வளத்துறை அமைச்சராக இருந்த, கே.பி.பி.சாமியின் சகோதரர், கே.பி.சொக்கலிங்கம், டில்லி, மோகன் மற்றும் அடையாளம் தெரியாத ஐவர் என்னைச் சுற்றி வளைத்து, கற்களாலும், இரும்புக் கம்பிகளாலும் என் முகம், தலை உட்பட பல இடங்களில் தாக்கி, கை, கால்களை பின்புறமாகக் கட்டி, காதுகளை அறுத்து 2 சவரன் காதணிகள், கழுத்திலிருந்த 13 சவரன் செயின், 1.25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வாட்ச், 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல்போன், சட்டைப் பையில் இருந்த 3,500 ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, என்னை கடலில் வீசிவிட்டனர்.பின்பு, அப்பகுதியில் உள்ள மக்கள் உதவியுடன் நான் ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். எலும்பு முறிவு சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றேன். சிகிச்சை முடிந்து சென்னை திரும்பி, என் சொந்த ஊரான திருவொற்றியூர் பலகைத் தொட்டி குப்பத்திற்கு சென்ற போது, என்னைத் தாக்கியவர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் ஊருக்குள் விடாமல் தடுத்ததுடன், மிரட்டினர்.



நானும், என் குடும்பத்தினரும் சொந்த வீடு, மனை மற்றும் மீன் தொழில் செய்யும் தொழிற்சாலை போன்றவற்றை விட்டுவிட்டு, அமைச்சரின் சகோதரர்களை எதிர்த்து வாழ முடியாததால் ஓடி வந்துவிட்டோம். நானும் என் குடும்பத்தினரும் திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்த போது, அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து கடும் முயற்சிக்குப் பின், இரண்டாண்டுகள் கழித்து வழக்கு பதிந்து எப்.ஐ.ஆர்., கொடுத்தனர். ஆனால், அதில் முழு விவரங்கள் இல்லாததுடன், அது தொடர்பான நடவடிக்கை ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை. போலீசார், கடந்த காலத்தில் அப்போதைய அமைச்சர் சாமிக்கு பயந்து எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.



இதனால், கடந்த ஐந்தாண்டுகளாக எங்கள் சொந்த ஊருக்குள் நுழைய முடியாமல், வீடு மற்றும் உடமைகளை விட்டு விட்டு பயந்து வாழ்ந்து வருகிறோம். மேற்கொண்டு எந்த தொழிலும் செய்ய முடியாமல், வாழ்வதற்கு வழியில்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கும் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்குவதுடன், என்னிடம் இருந்து பறித்துச் சென்ற பொருட்களை மீட்டுத் தர வேண்டுகிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துணை கமிஷனர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us