Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களுக்கு கட்சி மேலிடம் அழைப்பு

தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களுக்கு கட்சி மேலிடம் அழைப்பு

தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களுக்கு கட்சி மேலிடம் அழைப்பு

தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களுக்கு கட்சி மேலிடம் அழைப்பு

UPDATED : ஜூலை 24, 2011 02:24 AMADDED : ஜூலை 24, 2011 02:16 AM


Google News
தெலுங்கானா விவகாரத்தில், நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருவதை உணர்ந்த காங்கிரஸ் மேலிடம், சமாளிப்பு வேலைகளை துவக்கியுள்ளது.

தெலுங்கானா பிரச்னையில் தீவிரமாக உள்ள காங்கிரஸ் தலைவர்களை, பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்துள்ளது. அதே நேரத்தில், ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் முடிவை கூற வேண்டுமென, ராஜினாமா செய்த தெலுங்கானா எம்.பி.,க்கள் அனைவரும், காங்கிரஸ் மேலிடத்திற்கு கெடு வைத்துள்ளனர்.

தெலுங்கானா தனி மாநிலம் கோரிக்கை பிரச்னை நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், முக்கிய திருப்பமாக, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் 10 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதத்தை சில வாரங்களுக்கு முன், டில்லியில் சபாநாயகர் மீரா குமாரை நேரில் சந்தித்து அளித்தனர். யாருடைய தூண்டுதலின் பேரிலும் இல்லாமல் தாங்களாகவே சுயநினைவுடன் இந்த ராஜினாமாவை செய்வதாகவும், அவர்கள் மீரா குமாரிடம் கூறினர்.ராஜினாமா கடிதங்களை பெற்றுக் கொண்ட சபாநாயகரும் இதுகுறித்து ஆய்வு செய்த பின், இறுதி முடிவு எடுப்பதாக தெரிவித்தார். இதற்கிடையில், மத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணி அரசுக்கு, ஒன்பது காங்கிரஸ் எம்.பி.,க்களின் ராஜினாமா என்பது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இதனால், எக்காரணம் கொண்டும் இந்த எம்.பி.,க்களை இழந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.



பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது. அதற்குள் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் முடிவெடுக்க வேண்டுமென்பதால் மேலும் பரபரப்பு கிளம்பியுள்ளது. இவ்விஷயத்தில் சபாநாயகர் முடிவெடுக்காமல் இருப்பதும், ஒருவித குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. எனவே, அதற்குள் இந்த ராஜினாமா பிரச்னையை முடித்து வைக்க, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. அதற்காக, ஆந்திர மாநில காங்கிரசின் மேலிட பிரதிநிதியான குலாம்நபி ஆசாத் களம் இறக்கப்பட்டுள்ளார்.



அதன்படி, ஆந்திராவைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழுவை தனியாகவும், தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழுவையும் தனித்தனியாக சந்திக்க, குலாம் நபி ஆசாத் முடிவு செய்துள்ளார். இந்த ஒவ்வொரு குழுவிலும் 10 முதல் 12 பேர் வரை உறுப்பினர்கள் இருப்பர்.இந்த ஆலோசனையில் தெலுங்கானா குறித்து, முக்கிய பிரச்னைகளை அரசியல் ரீதியாக பேசவும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. நதி நீரை பகிர்வது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆராயப்படும். தலைநகர் பிரச்னையும் கூட இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் நகரத்தையே இரு மாநிலங்களுக்கும் தலைநகராக வைத்துக் கொள்ளலாம் என்ற ஒரு யோசனையும் கூட, அரசாங்க மட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.



தெலுங்கானாவைச் சேர்ந்த ராஜினாமா எம்.பி.,க்கள் அனைவரும் நேற்று முன்தினம், குலாம் நபி ஆசாத்தை டில்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது, ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் தெலுங்கானா குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டுமென்று ஒரே குரலில் வலியுறுத்தினர்.குலாம் நபியோ வேறு சில காரணங்களை கூறியதாகத் தெரிகிறது. தனக்கு உடல்நலம் சரியில்லை என்றும், அதன் காரணமாக தன்னால் அவ்வளவு சீக்கிரத்தில் முடிவை எடுத்துவிட முடியாது என்றும், குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது கால அவகாசம் வேண்டுமென்றும் கூறியுள்ளார்.



குலாம் நபியின் இந்த கால அவகாசத்தை கேட்டவுடன், ராஜினாமா எம்.பி.,க்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். இது ஏதோ காலம் தாழ்த்துவதற்குண்டான தந்திர யுக்தி என்பதை புரிந்து கொண்டு, அதை நிராகரித்து விட்டனர். இருப்பினும் அவர்களை சமாதானம் செய்த குலாம் நபி ஆசாத், வரும் திங்கட்கிழமை (நாளை) மீண்டும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.



குலாம் நபியின் இந்த அழைப்பை ஏற்று மீண்டும் வருவதா, வேண்டாமா என்பதில் எம்.பி.,க்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அனைத்து எம்.பி.,க்களுமே நேற்றே ஐதராபாத்திற்கு திரும்பிவிட்டனர். மேலிடத்தின் காலம் தாழ்த்தும் தந்திரத்திற்கு மீண்டும் பலியாகக் கூடாது என்பதால், பெரும்பாலான எம்.பி.,க்கள், குலாம் நபி ஆசாத் மீண்டும் அழைத்திருக்கும் கூட்டத்திற்கு வந்து பங்கேற்பரா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.-நமது டில்லி நிருபர்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us