தணிக்கை துறை புள்ளி விவரம் சந்தேகமளிக்கிறது: கருணாநிதி பேட்டி
தணிக்கை துறை புள்ளி விவரம் சந்தேகமளிக்கிறது: கருணாநிதி பேட்டி
தணிக்கை துறை புள்ளி விவரம் சந்தேகமளிக்கிறது: கருணாநிதி பேட்டி
ADDED : செப் 15, 2011 11:22 PM

சென்னை : '' தணிக்கைத் துறையின் புள்ளி விவரங்கள் சந்தேகமளிக்கின்றன'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி, சென்னை அறிவாலயத்தில் நேற்று நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தலில், தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்ததற்கு என்ன காரணம்?
தனியாக நிற்க முடியும் என்ற தைரியத்தில் கூறியுள்ளோம்.
அதற்கான காரணங்களைத் தெளிவாகத் தெரிவித்துள்ளேன்.
சட்டசபைத் தேர்தலின் போதே, இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார்களே?
ஏற்கனவே, நான் சட்டசபைத் தேர்தலுக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறியுள்ளேன். இது, தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
தனித்துப் போட்டி என்ற அறிவிப்பு, காங்கிரசோடு தற்போதுள்ள உறவைப் பாதிக்குமா?
காங்கிரசோடு உறவு, சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தல் போன்ற நேரங்களில் தான் தேவை. அப்போது, எங்கள் உறவு முறியாது; நீடிக்கும். மத்திய அரசுடன் நாங்கள் உறவோடு இருக்கிறோம்.
மத்தியிலும், மாநிலத்திலும், தணிக்கைத் துறை அதிகாரிகள் வெளியிடும் அறிக்கையில், அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் தெரிவிக்கிறார்களே?
ஒவ்வொன்றைப் பற்றியும், தனித்தனியாகத் தேவைப்பட்டால் விமர்சிக்க முடியுமே தவிர, பொதுவான கருத்து எதையும் சொல்ல முடியாது. துவக்கத்தில், தணிக்கைத் துறை அதிகாரிகள் அறிக்கையில், எத்தனையோ கோடிகள் நஷ்டம் என்று, சந்தேகமான புள்ளி விவரங்களைக் காட்டுகின்றனர். பின், அது யூகத் தொகை என்கின்றனர். இப்படி நஷ்டம் என்பதையே கேள்விக் குறியாகக் கூறியுள்ளனர்.
'டிராய்' அறிக்கையில், அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நஷ்டமே கிடையாது, லாபம் என்கிறார்களே?
அதைத் தான் நானும் கேட்கிறேன்.
தனித்துப் போட்டி என்று அறிவித்த பின், காங்கிரஸ் தலைமையில் யாராவது பேசினார்களா?
பேசவில்லை. அறிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளோம். காங்கிரசுடன் உறவு இல்லை என்று சொல்லவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லை, தனித்து நிற்கிறோம் என்று தான் அறிவித்துள்ளோம்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.