Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஊரக வேலை உறுதி திட்டம் ரூ.60 கோடியில் பணிகள் 425 பஞ்.,களில் 4 லட்சம் பேருக்கு அடையாள அட்டை

ஊரக வேலை உறுதி திட்டம் ரூ.60 கோடியில் பணிகள் 425 பஞ்.,களில் 4 லட்சம் பேருக்கு அடையாள அட்டை

ஊரக வேலை உறுதி திட்டம் ரூ.60 கோடியில் பணிகள் 425 பஞ்.,களில் 4 லட்சம் பேருக்கு அடையாள அட்டை

ஊரக வேலை உறுதி திட்டம் ரூ.60 கோடியில் பணிகள் 425 பஞ்.,களில் 4 லட்சம் பேருக்கு அடையாள அட்டை

ADDED : ஜூலை 21, 2011 02:24 AM


Google News



திருநெல்வேலி : தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் 4 லட்சம் பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக 2006-07ம் நிதி ஆண்டில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. 2ம் கட்டமாக 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டாலும் கடந்த 2008ம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் சிறப்பை கருதி அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுததப்படுகிறது.



ஊரக பகுதிகளில் உடல் உழைப்பை மேற்கொள்ள விருப்பமுள்ள 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதி ஆண்டில் 100 நாட்களுக்கு குறையாமல் வேலைவாய்ப்பை அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்ட செலவினத்தை மத்திய, மாநில அரசுகள் முறையே 90:10 என்ற வீதத்தில் பகிர்ந்து கொள்கிறது. இத்திட்டத்திற்கான கூலி நபர் ஒருவருக்கு 1.1.2010 முதல் 80 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும், கடந்த பிப்ரவரி மாதம் முதல் 100 ரூபாயில் இருந்து 119 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.



நெல்லை மாவட்டம்: நெல்லை மாவட்டத்தில் 19 பஞ்.,யூனியன்களில் உள்ள 425 கிராம பஞ்.,களில் மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 939 குடும்பங்களில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 451 நபர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் கடந்த ஜூன் மாதம் வரை மத்திய அரசு 2,497 லட்சம், மாநில அரசு 277 லட்சம் உட்பட மொத்தம் 2,774 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு இதில் 1,674 லட்சம் மதிப்பிலான பணிகள் நடந்துள்ளது.



மாவட்டத்தில் 2007-08ம் ஆண்டில் 76 ஆயிரத்து 662, 2008-09ம் ஆண்டில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 968, 2009-10ம் ஆண்டில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 349 நபர்களுக்கும், 2010-11ம் ஆண்டில் மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 524 நபர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



2009-10ம் ஆண்டில் மொத்தம் 1,144, 2010-11ம் ஆண்டில் 566 பணிகளும் முடிவடைந்துள்ளது. 2011-12ம் ஆண்டில் கடந்த ஜூன் மாதம் வரை 859 பணிகளுக்கு 59.28 கோடி மதிப்பில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 106 பணிகள் எடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் பல்வேறு பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள் நடந்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.



தொழிலாளர்கள் புகார்: இத்திட்டம் குறித்து தொழிலாளர்கள் கூறும் போது, ''வேலைவாய்ப்பு வசதியை அளிக்கும் வகையில் இத்திட்டம் ஆரம்பத்தில் நன்கு செயல்படுத்தப்பட்டது. ஆனால் நாளடைவில் இத்திட்டதிற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வந்தது. தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட கூலித் தொகையை முழுமையாக வழங்குவதில்லை. பல தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் புறக்கணித்தனர். எனவே, இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை நீக்கி சிறந்த முறையில் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us