
புதுடில்லி : தமிழக கவர்னராக, ஆந்திரா முன்னாள் முதல்வர் கே.ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக புதிய கவர்னராக ரோசய்யா, மார்கரெட் ஆல்வா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், ரோசய்யா தமிழக புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான முறையான அறிவிப்பு, ஜனாதிபதி மாளிகையிலிருந்து நேற்று வெளியிடப்பட்டது. கேரள புதிய கவர்னராக, புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் எம்.ஓ.எச்.பரூக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஜார்க்கண்ட் மாநில கவர்னராக பதவி வகித்து வருகிறார்.
மேலும், மத்திய பிரதேச மாநில கவர்னராக, காங்., மூத்த தலைவர் ராம்நரேஷ் யாதவ் மற்றும் மிசோரம் கவர்னராக, கேரள சட்டசபை முன்னாள் சபாநாயகர் வைக்கம் புரு÷ஷாத்தமனும், ஜார்க்கண்ட் கவர்னராக சையத் அகமதுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர கவர்னர் சங்கர நாராயணனுக்கு, கோவா கவர்னர் பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியில் சீனியர் தலைவர் என புகழப்படும் ரோசய்யாவிற்கு, காங்கிரஸ் கட்சி மேலிடத்திலும், மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பொது மக்களிடமும் மிகுந்த செல்வாக்கு உள்ளது.
யார் இவர் : ரோசய்யா, ஆந்திர சட்டசபையில் தொடர்ந்து ஏழு முறை உட்பட மொத்தம் 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமை பெற்றவர். இவர், குண்டூர் மாவட்டத்தில் உள்ள வேம்ரூ என்ற கிராமத்தில் 1933, ஜூலை 4ல் பிறந்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.


