தனியார் நுழைந்தால் விலையில் அடிக்காது "ஷாக்!' : காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்க துணைத் தலைவர் விருப்பம்
தனியார் நுழைந்தால் விலையில் அடிக்காது "ஷாக்!' : காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்க துணைத் தலைவர் விருப்பம்
தனியார் நுழைந்தால் விலையில் அடிக்காது "ஷாக்!' : காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்க துணைத் தலைவர் விருப்பம்
ADDED : ஜூலை 27, 2011 01:11 AM
பீளமேடு : ''தனியார் நிறுவனங்கள் போட்டியால், மின்சார விலை குறையவே வாய்ப்பு உள்ளது,'' என, அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்க துணைத் தலைவர் விருப்பம் தெரிவித்துள்ளார். மின் உற்பத்தியை நம்பி தமிழகத்தில், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து, 6,000த்துக்கும் மேற்பட்ட மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆனால், உற்பத்தியாகும் மின்சாரம், 3,000 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால், காற்றாலை மின்சாரம் சீராக இல்லை என, மின்வாரியம் குறைபட்டுக் கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால் மின்வாரியத்திடம், காற்றாலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை முழுமையாக கடத்தும் திறன் வாய்ந்த கருவிகள், கம்பி இணைப்புகள் இல்லை என்பது, காற்றாலை உரிமையாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
பல லட்சம் நஷ்டம்: தமிழகத்தைப் பொறுத்தவரை, முக்கிய நகரமாக கருதப்படுவது சென்னை. உயரழுத்த மின்சாரம் பெறும் இங்குள்ள தொழில் நிறுவனங்களுக்கு, ஞாயிறு ஒரு நாள் விடுமுறையாக உள்ளது. வழக்கமாக, 2,500 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகளிடமிருந்து பெறும் மின்வாரியம், ஞாயிறன்று, 814 மெகாவாட் மட்டுமே பெறுகிறது. மின்வாரியம், காற்றாலை மின்சாரத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ளாததால், பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. வீசும் காற்றைப் பொறுத்து, ஆண்டுக்கு ஆறு மாதம் மட்டுமே மின்சாரம் தயாரிக்கும் காற்றாலை நிறுவனங்கள், நஷ்டத்தை சந்திப்பதோடு மட்டுமல்லாமல், உற்பத்தியையும், வருவாயையும் இழக்கின்றன; பெற்ற கடனை, முறையாக அடைக்க முடியாமல் திணறுகின்றன.
அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:காற்று வீசும் போது மட்டும் தான் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். காற்று வீசும் குறுகிய நாட்களிலும், மின்வாரியம், மின்சாரத்தை எடுத்துக் கொள்ளாமல் விட்டு விடுவதால், காற்றாலை மின் உற்பத்தி செய்வோர் கவலையில் உள்ளனர். மாசு இல்லாமல், குறைவான பணத்தில் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தாமல் விட்டு விடுவதால், மின்வாரியத்தின் மின்சார மேலாண்மையில் பலவீனம் ஏற்படுகிறது. மிகச் சரியாக திட்டமிட்டு மின்சாரத்தை பயன்படுத்தாவிட்டால், இழப்பு தான் ஏற்படும். மின் வாரியத்தால் முறையாக பயன்படுத்திக் கொள்ள இயலாவிட்டால், மகாராஷ்டிராவில் உள்ளது போல், தனியார் நிறுவனங்களை மின் வர்த்தகத்துக்கு அனுமதிக்கலாம்; அவை முதலீடு செய்து, தேவையான இடங்களுக்கு மின்சாரத்தை கடத்தி விற்பனை செய்யும். தனியார் நிறுவனங்கள் போட்டியால், மின்சார விலை குறையவே வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, கஸ்தூரி ரங்கையன் கூறினார்.


