/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வாரச்சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகள் சர்வே: நகராட்சி அதிரடிவாரச்சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகள் சர்வே: நகராட்சி அதிரடி
வாரச்சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகள் சர்வே: நகராட்சி அதிரடி
வாரச்சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகள் சர்வே: நகராட்சி அதிரடி
வாரச்சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகள் சர்வே: நகராட்சி அதிரடி
ADDED : ஜூலை 19, 2011 09:31 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி வாரச்சந்தையில் நகராட்சி அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள பழைய இரும்பு ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் அளந்து சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி காந்திவாரச்சந்தையில் தற்காலிக கடைகள் வைத்து வியாபாரம் செய்து கொள்ள நிபந்தனைகளுடன் ஏலம் விடப்பட்டுள்ளது.
காந்திவாரச்சந்தை மாதம் 74,197 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 8,90,364 ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. மூன்றாண்டுக்கு விடப்பட்ட குத்தகை அனுமதி வரும் 2012 மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது.நகராட்சி இடத்தில் தற்காலிக கடைகள் அமைக்க உள் குத்தகைக்கு ஏலம் எடுத்தவர்கள், நகராட்சி அனுமதியின்றி கடைகளை அனுமதித்துள்ளனர். பழைய இரும்பு மார்க்கெட்டில் இருக்கும் இரும்பு கடைகள் காந்திவாரச்சந்தை இடத்திலும் விரிவடைந்துள்ளன. குத்தகைதாரர் அனுமதி, தி.மு.க., அ.தி.மு.க., கட்சி ஆதரவில் வாரச்சந்தை நிலத்தில் நிரந்தர கட்டமைப்புகள் ஏற்படுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், காந்தி வாரச்சந்தை ஆக்கிரமிப்பு கடைகள் விவகாரம் ஒவ்வொரு கவுன்சில் கூட்டத்திலும் விஸ்வரூபமெடுத்து வருகிறது. தி.மு.க., ஆதரவு பெற்ற ஒப்பந்ததாரர் என்பதால் நகராட்சி அதிகாரிகளும் குத்தகைதாரர் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், காந்தி வாரச்சந்தை ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் சென்றுள்ளன. இதையடுத்து, காந்திவாரச்சந்தை ஆக்கிரமிப்பு குறித்து சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி சர்வே துறை அதிகாரிகள், நகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் காந்தி வாரச்சந்தையை சர்வே செய்தனர். நகராட்சி ஏலம் விட்ட நிலத்தை தவிர, மீதமுள்ள நிலத்தை அளந்து 'மார்க்' செய்தனர்.
ஏலம் விடப்படாத நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கடையின் தன்மை, அளவு, கடை உரிமையாளர் பெயர் போன்ற விபரங்களை அதிகாரிகள் சேகரித்தனர். அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளுக்கு வரிசை எண் குறிப்பிட்டுள்ளனர். வாரச்சந்தை இடத்தில் 200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். நகராட்சி கமிஷனர் பூங்கொடி அருமைக்கண் கூறுகையில், ''நகராட்சி காந்தி வாரச்சந்தையில் உள் குத்தகைக்கு விடப்பட்ட இடத்தில் அனுமதியின்றி நிரந்தர கடைகள் அமைத்துள்ளனர். ஆக்கிரமிப்பு கடைகளை சர்வே செய்கிறோம். ஆக்கிரமிப்பு கடைகள் பட்டியல் தயாரிக்கப்பட்டதும், கவுன்சில் அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். கட்சி பேதமில்லை பொள்ளாச்சி காந்தி வாரச்சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் முக்கிய காரணமாக உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய
புள்ளிகளின் ஆதரவும், முன்னாள் அமைச்சரின் ஆதரவும் ஒப்பந்ததாரருக்கு இருந்ததால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்கி வந்தனர்.அ.தி.மு.க., ஆதரவிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்பட்டதால், அவர்களும் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தவில்லை. ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இல்லாத கவுன்சிலர்கள் இந்த பிரச்னையை கிளறும் போது, ஆக்கிரமிப்பு கடைகளை சர்வே செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் சப்பைக்கட்டு கட்டி வந்தனர். தற்போது, முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து உத்தரவுகள் வந்துள்ளதால், அதிகாரிகள் பம்பரமாக சுழல்கின்றனர்.


