ADDED : ஜூலை 29, 2011 11:14 PM
குன்னூர் : குன்னுரில் மினி பஸ் டிரைவருக்கும், பா.ஜ., மாநில நிர்வாகிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மினி பஸ் டிரைவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
பா.ஜ., மாநில இளைஞரணி தலைவர் குருமூர்த்தி; குன்னூர் பெட்போர்டு பகுதியில் வசிக்கும் இவர் நேற்று காலை சாலையில் காரில் அமர்ந்து, காரை 'ஸ்டார்ட்' செய்துள்ளார். பின்புறம் வந்த மினி பஸ் டிரைவர் தொடர்ச்சியாக 'ஹேர் ஹாரன்' ஒலி எழுப்பியுள்ளார். கடுப்பான, குருமூர்த்தி, மினி பஸ் டிரைவரிடம், 'ஏன் இப்படி ஹாரன் அடிக்கிறீர்கள்,' எனக் கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. குருமூர்த்தி கூறுகையில், ''தடை செய்யப்பட்ட ஹேர் ஹாரன் ஒலியை எழுப்பியது குறித்த கேட்டதற்கு, மின் பஸ் டிரைவர் தன்னை இரும்பு கம்பியால் தாக்க முயற்சித்தார்; தகாத வார்த்தையில் பேசினார்,'' என்றார். மினி பஸ் டிரைவர் செந்தில்குமார், ''குருமூர்த்தி தன்னை கடுமையாக தாக்கினார்,'' என கூறினார். குன்னூர் அரசு மருத்துவமனையில் செந்தில்குமார் சிகிச்சை பெற்றார். குன்னூர் டி.எஸ்.பி., மாடசாமி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சி தோல்வியடைந்தது. குருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, மினி பஸ் டிரைவர்கள் நேற்று காலை 11.00 மணி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் மேல் குன்னூர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். குருமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தததை தொடர்ந்து, மினி பஸ் டிரைவர்கள் மாலை 4.00 மணிக்கு ஸ்டிரைக்கை கைவிட்டனர்.