நாமக்கல், ஈரோடு, சேலம், கோவையில் நில மோசடிகள் ஏராளம் : அடுக்கடுக்காக குவியும் புகார்கள்
நாமக்கல், ஈரோடு, சேலம், கோவையில் நில மோசடிகள் ஏராளம் : அடுக்கடுக்காக குவியும் புகார்கள்
நாமக்கல், ஈரோடு, சேலம், கோவையில் நில மோசடிகள் ஏராளம் : அடுக்கடுக்காக குவியும் புகார்கள்
கடந்த ஆட்சிக் காலத்தில், சிக்கலான நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி சுருட்டியும், முக்கியமான இடங்களில் உள்ள அப்பாவிகளின் சொத்துகளை அபகரித்த சம்பவங்கள், எப்போதும் இல்லாத வகையில் அரங்கேறியுள்ளன.
தமிழக அரசுக்கு இதுகுறித்த குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, மோசடியாக மக்களிடமிருந்து அபகரித்த நிலங்களை மீட்டு, மக்களிடமே ஒப்படைக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து, நில மோசடி புகார்களுக்கு என, போலீசில் தனிப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான தனிப் பிரிவும் துவக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே, தமிழகம் முழுவதுமிருந்து, புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மிரட்டலுக்கு பயந்து இடத்தைக் கொடுத்தோர், ரவுடித்தனம் செய்து விரட்டியடிக்கப்பட்டோர் எல்லாம்,'அப்பாடா... இப்போதாவது விடியல் வருகிறதே' என்ற ஆர்வத்தில், வெகுண்டெழுந்து புகார் கொடுத்து வருகின்றனர். நில மோசடி புகார்களில் சில அ.தி.மு.க., பிரமுகர்களும் சிக்கி வருகின்றனர்.
அ.தி.மு.க., தரப்பில் சிலர் போலீசில் புகார் அளிக்காமல் நேரடியாக, போயஸ் கார்டனுக்கு புகார் மனுவை அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தமிழகம் முழுவதும், போலீஸ் தனிப்பிரிவில் நில மோசடி புகார்கள் 2,400ஐ தாண்டியுள்ளன. மாநகர்களில் உதவி கமிஷனர் தலைமையிலும், மாவட்டங்களில் டி.எஸ்.பி., தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நில மோசடி தடுப்பு பிரிவிலும், தினசரி மக்கள் கூட்டம் அலை மோதுகின்றன. இவ்வாறு வரும் மனுக்களை போலீசார் முறையாக விசாரித்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சில நேரங்களில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நிலத்தை இழந்தவர்களும், குறைந்த விலைக்கு விற்பனை செய்து தற்போது புதிய விலையை கருத்தில் கொண்டு மோசடி செய்து விட்டதாக புகார் தெரிவிப்பவர்களும் உள்ளனர். இந்த புகார்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, பொய் புகார்கள் இருப்பின் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
சென்னையில் மட்டும், நில மோசடி பிரிவில் 90க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகின்றன. சென்னை, போலீசில் உள்ள குறை தீர்ப்பு முகாமில் வரும் 50 புகார்களில், குறைந்த பட்சம் 20 புகார்களாவது நில மோசடி குறித்ததாக உள்ளதாகக் கூறப்படுகின்றன. இதுதவிர, மாநகர்களில் திருச்சியில் அதிகப்படியாக 126 புகார்களும், கோவையில் 62 புகார்களும், மதுரையில் 40 புகார்களும் பதிவாகியுள்ளன. மாவட்ட அளவில், நாமக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. நாமக்கலில் அதிகபட்சமாக 240 புகார்கள் அதாவது, மொத்த புகார்களில் 10 சதவீதம் நாமக்கலில் பதிவாகியுள்ளது. அடுத்ததாக, ஈரோடில் 181 புகார்களும், சேலத்தில் 176ம், திருப்பூரில் 155ம், கடலூரில் 124ம், திருச்சி மாவட்டத்தில் 99 புகார்களும் பதிவாகியுள்ளன.
நில மோசடி புகார்களின் பேரில், சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டவர்கள்மீதும்,மதுரையில்தி.மு.க.,வைச் சேர்ந்த அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ், தளபதி உள்ளிட்டவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது.
மதுரையில் அட்டாக் பாண்டி உள்ளிட்டவர்கள் தற்போது பாளையங்கோட்டை சிறையில் உள்ளனர். புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பறிகொடுத்தவர்களின் நிலங்கள் மீட்கப்பட்டு, அவர்களிடமே வழங்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் எவ்வித பயமுமின்றி, தற்போது நில மோசடி தொடர்பான புகார்களை அளித்து வருகின்றனர்.
நில மோசடி வழக்கில் சேர்க்க : நாகை மாவட்டம் குத்தாலத்தில், செயின்ட் மேரிஸ் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான, செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இதை, ஸ்டெல்லா, குணசீலன் ஆகியோர் நிர்வகித்து வந்தனர்.
இப்பள்ளியை, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினின் மைத்துனர் திருவெண்காடு டாக்டர் ராஜமூர்த்தியின் மனைவி ஹேமலதா, கடந்த ஆண்டு வாங்கினார். இந்நிலையில் ஹேமலதா, அவரது தந்தை மதன்மோகன், அறக்கட்டளை நிர்வாகி ஸ்டெல்லா ஆகியோர், தன்னை மிரட்டி, பள்ளியை எழுதி வாங்கியதாக, இரு தினங்களுக்கு முன், குணசீலன் போலீசில் புகார் செய்தார். மத போதகர் குணசீலன் கொடுத்த புகாரின்படி, குத்தாலம் போலீசார் ஹேமலதா, மதன்மோகன் மற்றும் ஸ்டெல்லா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 386, 506-1, ஆகியவற்றின் கீழ், வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.