முர்டோக் மீது ஷேவிங் க்ரீம் வீச்சு : பார்லி.,யில் பிரதமர் கேமரூன் விளக்கம்
முர்டோக் மீது ஷேவிங் க்ரீம் வீச்சு : பார்லி.,யில் பிரதமர் கேமரூன் விளக்கம்
முர்டோக் மீது ஷேவிங் க்ரீம் வீச்சு : பார்லி.,யில் பிரதமர் கேமரூன் விளக்கம்
லண்டன் : பிரிட்டனில் தொலைபேசி ஒட்டு கேட்பு குற்றச்சாட்டின் கீழ், அந்நாட்டு எம்.பி.,க்களால் விசாரணை மேற்கொண்டிருக்கும் போது, அத்துமீறி உள்ளே நுழைந்த ஒருவர் ரூபர்ட் முர்டோக் மீது ஷேவிங் க்ரீமை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக, பிரிட்டன் பார்லிமென்ட் எம்.பி.,க்கள் கமிட்டி முன்பு ஆஜரான, ரூபர்ட் முர்டோக், அவரது மகன் ஜேம்ஸ் முர்டோக், 'நியூஸ் இன்டர்நேஷனல்' முன்னாள் தலைவர் ரெபெக்கா புரூக்ஸ் மற்றும் ராஜினாமா செய்த லண்டன் போலீஸ் உயரதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர். எம்.பி.,க்கள் கமிட்டி விசாரித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராமல் திடீரென அத்துமீறி அறைக்குள் நுழைந்த ஒருவர் முர்டோக் மீது ஷேவிங் க்ரீமை வீசினார். அப்போது, பின் வரிசையில் அமர்ந்திருந்த முர்டோக்கின் மனைவி வென்டி டெங் தாவிச் சென்று தடுக்க முயற்சித்தார்.
'டிவி'க்களில் இந்த விசாரணை நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததால், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கொஞ்சமும் எதிர்பாராத 80 வயது முர்டோக், 'என் வாழ்க்கையின் இழிவான தருணம் இது' என்று மெல்லிய குரலில் கூறினார். விசாரணையில், தொலைபேசி ஒட்டு கேட்பு நடந்தது தனக்கு தெரியாது என்றும், இக்குற்றச்சாட்டின் கீழ் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், முர்டோக் விசாரணையில் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
கேமரூன் விளக்கம்:முர்டோக்கின் மீது ஷேவிங் க்ரீம் வீசப்பட்ட சம்பவத்தை, பிரிட்டன் பத்திரிகைகள் கடுமையாக கண்டித்துள்ளன. இதுகுறித்து, செய்தி வெளியிட்டுள்ள கார்டியன் பத்திரிகை, 'தொலைபேசி ஒட்டு கேட்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். பார்லிமென்ட் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்' என்று தெரிவித்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுக்கும், முர்டோக்கிற்கும் இடையே அரசியல் ரீதியான தொடர்பு உள்ளது. இதையடுத்து பார்லிமென்ட்டில் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்' என்று எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன. இதைத் தொடர்ந்து, ஆப்ரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் கேமரூன், பயணத்தை ரத்து செய்து, பிரிட்டன் திரும்பினார். நேற்று, பார்லிமென்ட்டில் இக்குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்தார்.
தற்போது, ஆஸ்திரேலியா பிரதமர் ஜூலியா கில்லார்டும், 'தொலைபேசி ஒட்டு கேட்பு தொடர்பான கடுமையான கேள்விகளுக்கு, நியூஸ் கார்பரேஷன் பதிலளிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 'தொலைபேசி ஒட்டு கேட்பு முர்டோக்கிற்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை' என்று ஆஸ்திரேலிய பண்பாட்டுத்துறை அமைச்சர் ஜெரிமி ஹன்ட் குற்றம்சாட்டியுள்ளார்.