PUBLISHED ON : செப் 21, 2011 12:00 AM

'இந்தியாவிற்காக விளையாடணும்!' எறிபந்து வீராங்கனை அமிர்த்தா ராஜ்: என் அப்பா அந்தோணிராஜ், வியாபாரி; அம்மா ஆசிரியை.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, 'சம்மர் கோச்சிங்' விளையாட போன போது தான், எறிபந்தில் (த்ரோபால்) எனக்கிருந்த ஆர்வத்தையும், திறமையையும் நான் உணர்ந்தேன். இரண்டு ஆண்டில், இந்திய அளவிலான போட்டிகளில் விளையாடும் அளவிற்கு வளர்ந்தேன். கடந்த, 2004ல் போபாலில் நடந்த போட்டி தான், நான் விளையாடிய முதல் தேசிய அளவிலான போட்டி. இதுவரை தமிழக அணிக்காக, 30 முறைக்கு மேல் விளையாடியிருக்கிறேன். விளையாட ஆரம்பித்த மூன்றாவது ஆண்டில், தமிழக எறிபந்து அணிக்கு கேப்டன் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் நடந்த சர்வதேச டெஸ்ட் போட்டியில், இந்தியாவிற்காக விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஐந்து நாட்கள் நடந்த அந்தப் போட்டியில், இலங்கை டீமை ஜெயித்தது, என் வாழ்வில் மறக்க முடியாதது. கவனத்தை ஒருமுகப்படுத்துதல், மன வலிமை, நேரம் தவறாமை, சமயோஜிதம், ஆர்வம், உடல் நலம், நவீன யுக்திகள் என்று, மற்ற விளையாட்டிற்கான பார்முலா தான் எறிபந்திற்கும். கடந்த, 2005ல் நடந்த தேசிய சீனியர் போட்டியில், டில்லி அணியுடன் மோதினோம். தோற்கும் நிலையிலிருந்த எங்கள் டீமை, நான் வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றேன். இதனால், சிறந்த எறிபந்து விளையாட்டு வீரர் என்ற விருது கிடைத்தது. நான் கேப்டனாக பொறுப்பேற்ற இந்த மூன்று வருடங்களில், தமிழக எறிபந்து அணிக்குப் பெற்றுத் தந்துள்ள வெற்றிகள் ஏறுமுகம் தான். என் எதிர்கால லட்சியம், சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடி சாதிக்க வேண்டும் என்பது தான்!