Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

PUBLISHED ON : ஆக 29, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

தூக்கு தண்டனை தேவைதான்!



கா.அன்பழகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நாட்டில் இதுவரை இதுபோல எத்தனையோ குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டிருக்கின்றனர்.

இதுவரை அதுகுறித்து எந்தத் தனி நபரோ, சமூக அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ எதிர்த்து குரல் கொடுத்ததில்லை.

ராஜிவ் கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள், ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இப்போது பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும், தூக்கு தண்டனைக்கு எதிராக குரலை உயர்த்தத் துவங்கி இருக்கின்றனர்.



ராஜிவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மொத்தம், 26 பேர். அத்தனை பேருக்கும் சிறப்புப் புலனாய்வு நீதிமன்றம், மரண தண்டனைதான் வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட், அதில், 23 பேரின் மரண தண்டனையை ரத்து செய்தது. இந்த மூவருக்கு மட்டும் ஏன் மரண தண்டனையை உறுதி செய்தது. முகாந்திரம் இருந்ததால்தானே இம்மூவரின் தண்டனையை உறுதி செய்தது.மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் ஏன் இதை சிந்திக்க மறுக்கின்றனர்? இம்மூவரின் மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் கூறும் காரணங்கள் வினோதமாக உள்ளது.



அவர்கள், 'தமிழர்கள்' என்கின்றனர். அப்படியென்றால், அவர்கள் மலையாளிகளாகவோ, தெலுங்கர்களாகவோ, கன்னடர்களாகவோ அல்லது வேறு ஏதேனும் மொழி பேசுபவர்களாகவோ இருந்தால் எதிர்க்க மாட்டார்களா?

ஒன்பது கொலைகள் புரிந்த ஜெயப்பிரகாஷும், கணக்கில்லாமல், எதிர்ப்பவர்களைப் போட்டுத் தள்ளிய ஆட்டோ சங்கரும் கூட, தமிழர்கள் தானே... அப்போது இவர்கள் எல்லாம் எங்கே சென்றிருந்தனர்?'பேரறிவாளன் பேட்டரிதான் வாங்கிக் கொடுத்தார்; அதற்கா மரண தண்டனை' என்கின்றனர் இவர்கள்.



பேட்டரி வாங்கியது தப்பில்லை; ஆனால், அதை யாருக்குக் கொடுத்தார், எதற்குக் கொடுத்தார் என்பதுதான் தப்பு. 'போப்பா... நீங்களே போய் பேட்டரி வாங்கிக் கொள்ளுங்கள்' என்று சொல்லி இருக்கலாமே! 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பது இதுதான்.

சாந்தனின் பெயரில் குழப்பமாம். அதனால் மாட்டிக் கொண்டாராம். இது, அந்த சாந்தன் இல்லை என்று நீதிமன்றத்தில் நிரூபித்து இருக்க வேண்டியது தானே. இப்போது புலம்பி என்ன பயன்?

முருகனின் மனைவிக்கு, மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாம். அதனால், முருகனுக்கு, 'விலக்கு' வேண்டுமாம்.



ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா என்று கேள்வி வேறு.

இவர்களது கேள்வி, நளினியின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்ததைக் கூட, அரசு மறுபரிசீலனை செய்ய வைத்துவிடும் போலுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை நிச்சயம் என்ற சட்டம், நாட்டில் இருக்கும்போதே, நாளும் சர்வ சாதாரணமாக, சகாய விலையில், கூலிப்படையினரால் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.



இந்நிலையில், மரண தண்டனையும் கிடையாது என்ற நிலை வருமானால், நாடும், நாட்டில் உள்ள மக்களும், என்ன கதி ஆவர் என்பதை சற்று பகுத்தறிவோடு சிந்தித்துப் பாருங்கள். உண்மை புரியும்; உள்ளம் தெளியும்.



ஹசாரேயும்,காந்தியும்...



சு.ராமஜோதி, பெரியநாயக்கன்பாளையம், கோவையிலிருந்து எழுதுகிறார்: திகார் சிறையில் இருந்து வெளிவந்த அன்னா ஹசாரே, ராம்லீலா மைதானத்தில், காந்தியை போலவே வேக வேகமாக ஓடியதைப் பார்க்க முடிந்தது.தூய எண்ணத்திலும், தூய சிந்தனையிலும், காந்தியைப் போலவே இருக்கிறார் ஹசாரே. ஆனால், அவரின் வலிமையான லோக்பால் கோரிக்கைக்கு, முக்கியமான கட்சிகள் இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

எப்படி தெரிவிக்கும்?

ஹசாரே ஒரு அரசியல்வாதியல்ல; அவரிடம் உள்ளவர்கள், பணம் கொடுத்து கூட்டி வந்த கூட்டமல்ல. இந்திய தேசத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும், தேசப்பற்றுள்ள மக்களையே இன்று பார்க்க முடிகிறது. தேசியக் கொடியைத் தவிர, எந்த அரசியல் கொடியும், அவர்கள் கைகளில் இல்லை.



தேசத்தைச் சுரண்டும் களவாணிகளுக்கு எதிராக இவர்கள் போராடுகின்றனர். இன்று நாம், இரண்டாவது சுதந்திர போராட்டத்தை துவக்கி இருக்கிறோம்.

'மைதானத்தில் கூட்டம்போடும் சமூக சேவகர்கள், சட்டம் இயற்ற முடியாது. பார்லிமென்ட் தான், சட்டத்தை இயற்ற வேண்டும்' என, பார்லிமென்டில் சிதம்பரம் கூறியுள்ளார்.

அய்யா உள்துறை அமைச்சரே... மைதானத்தில் கூட்டம் போடும் மக்கள் தான், ஓட்டுப் போட்டு உங்களை பார்லிமென்டிற்கு அனுப்புகின்றனர். அவர்களின் எண்ணமாகவும், குரலாகவும் தான் நீங்கள் இருக்க வேண்டுமே தவிர, மக்களை ஆளுகிறோம் என்ற தலைக்கனத்துடன் அல்ல!

வலிமையான, வலுவான லோக்பால் தேவை என்பதை, தானாக சேர்ந்த மக்கள் கூட்டம், மத்திய அரசுக்கு புரிய வைக்கும் என நம்புகிறோம். அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்காமல், மத்திய அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.



நடுங்குகிறதுகாங்கிரஸ்!

வி.பாலு, சென்னையில் இருந்து எழுதுகிறார்: 'அரசாங்கத்தில் சாதாரண காரியத்தை முடிக்கக் கூட, சாமானியன் லஞ்சம் தரவேண்டியுள்ளது. மக்கள் நலத்திட்டப் பணிகளை செயல்படுத்துவோர், ஒதுக்கப்பட்ட நிதியை சுருட்டுவதால், பயனாளிகள் கஷ்டப்படுகின்றனர். இதனால், பொருளாதாரத்தின் மீது, சமுதாயத்துக்கு உள்ள நம்பிக்கை தளர்ந்து விடுகிறது' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.மேலும், 'லோக்பால், ஊழலைத் தடுக்க உதவும்; ஆனால், ஒரு தீர்வு ஆகாது. அரசின் செயல்பாடு வெளிப்படையாக இருக்கும்படி, இந்திய நிர்வாக மேலாண்மை மையம், வழிமுறைகளை பரிந்துரைக்க வேண்டும்' என்றும், கோல்கட்டா நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் கூறியுள்ளார்.



சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு உண்ணாவிரதத்தின் விளைவுகள் குறித்து, பிரதமர், சக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

'எம்.பி.,க்கள், மத்திய அமைச்சர்களின் இல்லங்கள் முன், ஹசாரே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது, மிக ஆபத்தான போக்கு' என, வர்த்தக அமைச்சர் வீரப்ப மொய்லி மிரள்கிறார்.சோனியா, மருத்துவமனையில் உள்ளார். சீனியர் காங்கிரஸ் தலைவர்களிடம், 'ஈகோ' வியாதி உள்ளது. எல்லாருமே அதிமேதாவிகள். ஹசாரே கொளுத்திப்போட்ட சிறு நெருப்பு, பற்றி எரிகிறது. ஊழலுக்கு எதிராக எரியும் நெருப்பைத் தணிக்க, நேர்மை, சமயோசிதம், தேசபக்தி, ஆளுமை மிக்க தலைமை தேவை.

ஹசாரே மீது பழி கூறி, அவரது போராட்டத்தை அவமதித்தால், காங்கிரஸ் தொலைந்து விடும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us