Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு சி.பி.ஐ., கோர்ட்டுகள்

அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு சி.பி.ஐ., கோர்ட்டுகள்

அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு சி.பி.ஐ., கோர்ட்டுகள்

அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு சி.பி.ஐ., கோர்ட்டுகள்

ADDED : செப் 15, 2011 11:43 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, 71 விரைவு சி.பி.ஐ., கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய நிர்வாகத் துறை இணை அமைச்சர் நாராயணசாமி இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: ஊழலை ஒழிக்க, அரசு அக்கறை கொண்டுள்ளது. அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு முன், ஊழலை ஒழிப்பதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்தார். இந்த அமைச்சர்களின் பரிந்துரையின் பேரில் ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை விசாரிக்க, 71 விரைவு சி.பி.ஐ., கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது, மூன்று மாதத்திற்குள் வழக்கு பதிவு செய்து, இந்த கோர்ட் மூலம் விசாரிக்க ஏற்பாடு செய்யப்படும். அரசின் உத்தரவின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நிலுவையில் உள்ள 10 ஆயிரம் வழக்குகளை, இந்த 71 கோர்ட்டுகளில் 44 கோர்ட்டுகள் ஏற்கனவே விசாரிக்கத் துவங்கிவிட்டன.

ஊழலை ஒழிப்பது குறித்த பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளோம். இவற்றுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். லோக்பால் குறித்து அன்னா ஹசாரேவின் கருத்தையும் பரிசீலிக்கிறோம். அதற்காக அவர் சொன்னதையெல்லாம் ஏற்றுக்கொள்வோம் என்பதல்ல. பெட்ரோல் பங்க், நிலம், தொலைபேசி போன்ற ஒதுக்கீட்டு அதிகாரம் அமைச்சர்களுக்கு அளிக்கப்படக்கூடாது எனவும் பிரதமரிடம் அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

அரசு துறை அதிகாரிகள் மீது ஊழல் குற்றம் சாட்ட, சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் சி.பி.ஐ., கோரினால், மூன்று மாதத்துக்குள் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனுமதிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றம் சாட்ட அனுமதிக்காவிட்டால், அதற்குரிய காரணத்தை ஒரு வாரத்துக்குள் அந்த துறை அதிகாரிகளோ, அமைச்சரோ அறிக்கையாக அளிக்க வேண்டும்.

பத்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆராய, தற்போது பணியில் உள்ள சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்படும். நிலுவையில் உள்ள வழக்குகளை தொடருவதா? தள்ளுபடி செய்வதா என்பதை இந்த கமிட்டி முடிவு செய்யும். தற்போது 2,600க்கும் அதிகமான வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ளன. சுப்ரீம் கோர்ட் நீதிபதி மற்றும் ஓய்வு பெற்ற ஊழல் கண்காணிப்பு கமிஷனர், சி.பி.ஐ., இயக்குனர் ஆகியோர் கொண்ட குழு, இந்த வழக்குகள் குறித்து ஆராயும். ஊழல் செய்த அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும் கூட, அவர் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஏனென்றால், அவரது ஓய்வூதியத்தில் 10 சதவீதத்தை பிடித்தம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பெரிய அளவில் ஊழல் செய்யும் அதிகாரிகள், கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பப்படுவர். அவர்களது 20 சதவீத ஓய்வூதியம் பிடித்தம் செய்யப்படும். ஊழல் செய்த ஊழியர்கள் எடுத்த எடுப்பிலேயே வீட்டுக்கு அனுப்பப்பட மாட்டார்கள். அடிப்படை உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் திருந்த, மற்றொரு வாய்ப்பு கொடுக்கப்படும். விசாரணை அதிகாரிகள் அடிக்கடி மாறுவதால், வழக்குகள் தாமதமாகின்றன. இதற்காக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நாராயணசாமி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us