ஆன்லைன் பராமரிப்பு ஒப்பந்த குளறுபடி: மின் வாரியத்திற்கு புதிய தலைவலி
ஆன்லைன் பராமரிப்பு ஒப்பந்த குளறுபடி: மின் வாரியத்திற்கு புதிய தலைவலி
ஆன்லைன் பராமரிப்பு ஒப்பந்த குளறுபடி: மின் வாரியத்திற்கு புதிய தலைவலி
ADDED : ஜூலை 27, 2011 01:22 AM
சென்னை : தமிழக மின் வாரியம் 45 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தவிக்கும் நிலையில், மின் வெட்டு மற்றும் ஆன்லைன் கம்ப்யூட்டர் சேவை ஒப்பந்த பிரச்னையால், மின் கட்டண வசூலில் தொடர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் கடனில் தவிக்கும் மின் வாரியத்திற்கு புதிய பிரச்னையாக, கட்டண வசூலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் மின் வெட்டு அமலாகும் நேரத்தில், சென்னையில் ஒரு மணி நேரமும், மாவட்டங்களில் இரண்டு மணி நேரமும், பராமரிப்பு பணிக்காக தடை செய்யப்படும் நாளிலும் கம்ப்யூட்டர்கள் இயங்காததால், மின் கட்டண வசூல் பாதித்துள்ளது.
இது குறித்து, மின் வாரிய வருவாய் பிரிவு அதிகாரி கூறியதாவது: மின் வெட்டு நேரத்தில் கம்ப்யூட்டர்கள் இயங்காததால், கட்டண வசூல் பாதிக்கிறது. இதை தடுக்க, மாவட்டங்களில் உள்ள கவுன்டர்களுக்கு ஜெனரேட்டர் கொடுத்துள்ளோம். ஆனால், கெரசின் கிடைப்பது பிரச்னையாகிறது. கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் கெரசினை வாங்கினால், அதற்கான பணத்தை மின் வாரிய செலவுக் கணக்கில் எடுக்க, வாரிய விதிகளில் இடமில்லை. இதனால், மின் வெட்டு நேரத்தில் ஜெனரேட்டரும் இயங்குவதில்லை; கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், கடந்த 15 நாட்களாக மின் கட்டண வசூலில் புதிய தலைவலியாக, கம்ப்யூட்டர் 'சர்வர்' பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கே.கே., நகர், தி.நகர், போரூர், குன்றத்தூர், நங்கநல்லூர், தாம்பரம், செங்கல்பட்டு, பாலவாக்கம், நீலாங்கரை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களிலும், பிற மாவட்டங்களிலும் 15ம் தேதி முதல், மின் கட்டண வசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் பொறியாளர்களிடம் கட்டண வசூல் பிரிவு ஊழியர்கள் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. கட்டணம் வசூலிக்காததால், பொதுமக்கள் பலர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். மின் கட்டண வசூல் பிரிவு ஊழியர்கள் கூறும்போது, 'அனைத்து மைய கம்ப்யூட்டர்களையும் ஆன்லைனில் இணைக்கும், 'கனெக்டிவிடி மோடம்' கருவி பழுதானதால், உள்ளூர் கட்டணங்கள் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதிலும், மின் வெட்டு மற்றும் நாள் முழுவதுமான மின் தடை நேரத்தில் கம்ப்யூட்டர்களை இயக்க முடியாமல் வசூல் பாதிக்கிறது. மின் தடை நேரத்தில் பயன்படுத்த வழங்கப்பட்ட 'யு.பி.எஸ்.,' பேட்டரிகளும் பராமரிப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். மின் பற்றாக்குறை, புதிய திட்டங்களை துவக்குவதில் சிக்கல், மத்திய அரசின் முட்டுக்கட்டை, டெண்டர் பிரச்னை, வழக்குகள் மற்றும் அடைக்க முடியாத கடன் என தவிக்கும் மின் வாரியம், முறையாக வசூல் செய்ய வேண்டிய துறையிலாவது முழு கவனம் செலுத்தி, போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டியது கடமை.
'ஆன்லைன்' செயலிழப்பு
இதுகுறித்து, மின் கட்டண வசூல் மைய பராமரிப்பு அதிகாரி கூறியதாவது: கம்ப்யூட்டர்களை பராமரிக்க, சென்னையைச் சேர்ந்த ஜெமினி கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம் கான்ட்ராக்ட் எடுத்திருந்தது. இந்த ஒப்பந்தம், ஜூன் 30ம் தேதியுடன் முடிந்தது. அந்த நிறுவனத்திற்கு 30 கோடி ரூபாய் மின் வாரியம் பாக்கி வைத்ததால், மின் வாரியமே, 'ஆன்லைன்' பராமரிப்பை மேற்கொள்கிறது. இதனால், தரமான கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்க முடியவில்லை. இதுவரை தனியார் நிறுவனம் பயன்படுத்திய வெளிநாட்டு உதிரி பாகங்கள் கிடைக்காமல், கம்ப்யூட்டர் மோடம் அவ்வப்போது செயலிழக்கிறது. எனவே, பிரச்னையைத் தீர்க்க, மீண்டும் பழைய ஒப்பந்ததாரரின் உதவியை கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
நமது சிறப்பு நிருபர்