PUBLISHED ON : ஆக 26, 2011 12:00 AM

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம்: அறிவாலயத்தில் மட்டுமல்ல, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் பொதுமக்கள் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, தன் மாமியார் பெயரில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து, கட்டடமே கட்டியுள்ளார்.
டவுட் தனபாலு: அமைச்சர் பெருமக்கள் எல்லாம் இதை யாருக்குச் சொல்லிட்டு இருக்கீங்கன்னே புரியலையே... அப்படி அவங்க உண்மையிலேயே ஆக்கிரமிச்சிருந்தாங்கன்னா, சட்டுபுட்டுன்னு வழக்கு போட்டு, கட்டடத்தை இடிக்க வேண்டியது தானே... யாரு தடுக்கறாங்கறது தான் என்னோட, 'டவுட்!'
தி.மு.க., தலைவர் கருணாநிதி: முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை நடத்திக் காட்டுகின்றனர்.
டவுட் தனபாலு: நெருக்கடி நிலைன்னா எப்படி... இந்திரா காலத்துல நீங்க அனுபவிச்சீங்களே, அந்த மாதிரியா...? தேர்தல் நேரத்துல நொந்துபோய் புலம்புனீங்களே, அந்த மாதிரியா...? இல்லை, அதையெல்லாம் விட அதிகமான நெருக்கடியா...?
உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி: தி.மு.க., தலைமையிடமான அறிவாலயத்தில் உள்ள, மாநகராட்சிக்குச் சொந்தமான இடம், மீட்கப்படும். சட்டத்தை மதித்து நடக்கும் இந்த ஆட்சியில், சட்டத்தை மீறி ஆக்கிரமித்தவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
டவுட் தனபாலு: இது என்ன மாதிரியான மீட்போ தெரியலை, போங்க... நீங்களும் ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போது இதை அறிவிக்கிறீங்க... அவங்களும் உடனடியா அங்கே நாலு நாற்காலியையும், ரெண்டு பூந்தொட்டியையும் வச்சு, 'பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இடம் விட்டுள்ளோம்'கிறாங்க...!