Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இரண்டு ஆண்டுகளாக மகாசபை கூட்டம் இல்லை "டியூகாஸ்' நிதி நிலைமை மீது உறுப்பினர்கள் சந்தேகம்

இரண்டு ஆண்டுகளாக மகாசபை கூட்டம் இல்லை "டியூகாஸ்' நிதி நிலைமை மீது உறுப்பினர்கள் சந்தேகம்

இரண்டு ஆண்டுகளாக மகாசபை கூட்டம் இல்லை "டியூகாஸ்' நிதி நிலைமை மீது உறுப்பினர்கள் சந்தேகம்

இரண்டு ஆண்டுகளாக மகாசபை கூட்டம் இல்லை "டியூகாஸ்' நிதி நிலைமை மீது உறுப்பினர்கள் சந்தேகம்

ADDED : ஆக 05, 2011 01:36 AM


Google News
துடியலூர் : துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தின் ( டியூகாஸ்) நிதி நிலைமை குறித்து, உறுப்பினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலனை செய்ய மகாசபையை ஒரு மாத காலத்துக்குள் கூட்ட வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.துடியலூரில் உள்ளது, துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம். இது, தென் இந்தியாவின் மிகப்பெரிய விவசாய கூட்டுறவு சங்கம். இங்கு வேளாண்மை பயிர் சாகுபடிக்கு தேவையான உரம், பூச்சி மருந்து, விதைகள் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும். இந்த நிறுவனத்தின் கீழ் டாடாபாத், இடிகரை, சிவானந்தா காலனி உள்ளிட்ட 7 இடங்களில் டியூகாஸ் கிளைகள் செயல்படுகின்றன. டியூகாஸ் வங்கியில் 100 கோடி ரூபாய் வைப்புத் தொகை உள்ளது. இந்த ஸ்தாபனத்தில் 9 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு மகாசபை கூட்டம் நடந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.இதனால், தற்போது ஸ்தாபனத்தின் நிதி நிலைமை, செயல்பாடுகள், தணிக்கை செய்த விபரம், உறுப்பினர்களுக்கு வர வேண்டிய பங்கு ஈவுத் தொகை குறித்து விபரம் தெரியவில்லை.

இது தொடர்பாக டியூகாஸ் நிறுவனம் உறுப்பினர்களுக்கு போதுமான காரணத்தை தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டியூகாஸ் ஸ்தாபனத்தின் உறுப்பினர் காளிச்சாமி கூறியதாவது: ஆண்டுக்கு ஒரு முறை மகாசபையை கூட்டுதல், ஆண்டு வரவு-செலவு கணக்கை ஆய்வுக்குட்படுத்தி ஏற்றுக் கொள்ளுதல், தணிக்கை சான்றை ஏற்றுக் கொள்ளல், டியூகாஸ் நிறுவன துணை விதிகளை உருவாக்குதல் மற்றும் நீக்கல், உறுப்பினர்களை நீக்கம் செய்தல் உள்ளிட்ட பல பணிகளுக்கு மகாசபையை கூட்ட வேண் டும். கடந்த 2 ஆண்டுகளாக மகா சபையை கூட்டப்படவில்லை. டியூகாஸ் நிறுவனத்தில் விவசாயிகளுக்காக வைக்கப்பட்டிருந்த டி.ஏ.பி., உரம் அஜாக்கிரதையால் சேதம் அடைந்தது. டியூகாஸ் நிறுவனத்தின் கிளைகளில் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும், ஆனால், சரிவர நடக்கவில்லை.

உறுப்பினர்களுக்கு 100 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் டிவிடெண்ட் தொகை வழங்க வேண்டும். 2007-08 ம் ஆண்டில் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய டிவிடெண்ட் 10 லட்ச ரூபாய் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை. கோவை மாவட்டத்தில் பல கூட்டுறவு சங்கங்களின் மகாசபை கூட்ட அறிவிப்புகள் வருகின்றன. ஆனால், டியூகாஸ் அறிவிப்பு இன்னும் வரவில்லை. கூட்டுறவு சங்கங்களின் சட்டம், விதிகள், துணை விதிகள்படி குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது மகாசபையை கூட்ட வேண் டும். இது குறித்து ஸ்தாபன செயலாளர் மற்றும் தனி அலுவலரை பலமுறை அணுகியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. டியூகாஸ் நிறுவன நிதி நிலைமை மீது உறுப்பினர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, 2007-08 ம் ஆண்டிலிருந்து நாளதுவரை தணிக்கை முடிக்கப்பட்ட ஆண்டுக்கான ஆண்டு அறிக்கை பரிசீலித்தல், லாப பிரிவினை ( டிவிடெண்ட்) முடிவு செய்தல், வரவு செலவு திட்டங்கள், நிதி நிலை அறிக்கை, எதிர்வரும் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு அங்கீகாரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பொருள் குறித்து மகாசபையை கூட்டி விவா திக்க வேண்டும். இது குறித்து கோவை மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உறுப்பினர் காளிச்சாமி கூறினார்.டியூகாஸ் ஸ்தாபன செயலா ளர் வெங்கடாசலம் கூறியதாவது:கடந்த 2007-08, மற்றும் 2008-09 ஆண்டுகளுக்கான தணிக்கை அறிக்கை முழுமையாக கிடைத்தவுடன் மகாசபை கூட்டம் நடத்தப்படும். ஏற்கனவே, தனி அலுவலராக இருந்தவர் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டதால், கூட்டம் நடத்த முடியவில்லை. தற்போது, புதிய தனி அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த மாதம் மகாசபை கூட்டம் நடக்கும். டியூகாஸ் கிளை நிறுவனங்களில் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டியூகாஸ் நிதி நிலைமை பாதுகாப்பாக உள்ளது. பொதுமக்கள், விவசாயிகள், உறுப்பினர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.இவ்வாறு, வெங்கடாசலம் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us