Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஏழை மாணவர்களுக்கு இலவச படிப்பு சண்முகா இன்ஜி., கல்லூரி அறிவிப்பு

ஏழை மாணவர்களுக்கு இலவச படிப்பு சண்முகா இன்ஜி., கல்லூரி அறிவிப்பு

ஏழை மாணவர்களுக்கு இலவச படிப்பு சண்முகா இன்ஜி., கல்லூரி அறிவிப்பு

ஏழை மாணவர்களுக்கு இலவச படிப்பு சண்முகா இன்ஜி., கல்லூரி அறிவிப்பு

ADDED : ஆக 01, 2011 03:34 AM


Google News
திருச்செங்கோடு: 'ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், 180க்கு மேல் 'கட்-ஆஃப்' மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு, நான்கு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம்' என, திருச்செங்கோடு சண்முகா இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சண்முகா இன்ஜினியரிங் கல்லூரியில், பி.இ., சிவில், மெக்கானிக்கல், இ.சி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. குளிர் சாதன வகுப்பறை, நூலகம், நவீன ஆய்வுக்கூடம், மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதி வசதி மற்றும் பஸ் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி செல்லும் சாலை, புள்ளிபாளையத்தில், 90 ஏக்கர் பரப்பளவில் சண்முகா இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. சங்ககிரி ரயில் நிலையத்தின் அருகில், ஒரு லட்சம் சதுரடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.ஏழை மாணவ, மாணவியர் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், இலவச கல்வி மற்றும் கட்டணச் சலுகைகள் அறிவித்துள்ளோம். நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று ஏழ்மை நிலை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பொருளாதாரத்தில் பின் தங்கி, இன்ஜினியரிங் பட்டபடிப்பு படிக்க முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கும் கல்வி கட்டணம் முழுவதும் இலவசம்.மேலும், 180க்கு மேல் 'கட்-ஆஃப்' மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கும் நான்கு ஆண்டுகளுக்குகான முழு கல்விக்கட்டணமும் இலவசம். 150 மதிப்பெண்களுக்கு மேல் 'கட்-ஆஃப்' மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்விக் கட்டணத்தில், 50 சதவீதம் இலவசம்.125 மதிப்பெண்களுக்கு மேல் 'கட்-ஆஃப்' மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்வி கட்டணத்தில், 25 சதவீதம் இலவசம்.ஆதரவற்றோர், ஏழைகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், தாய், தந்தையை இழந்த நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்று இன்ஜினியரிங் படிப்பை தொடர முடியாத மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம் முழுவதும் இலவசமாக அளிக்கப்படும். இன்ஜினியரிங் பட்ட படிப்புக்கான கல்வி கட்டண சலுகை வாய்ப்பை மாணவ, மாணவியரும், பெற்றோர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள, 04283-261199, 261299 என்ற தொலைபேசி எண்ணிலும், 88834 18108, 94860 69246, 81441 59676 ஆகிய மொபைல் ஃபோனிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் துப்புரவு பணியாளர் பரிதாப பலி

ப.வேலூர்: இரண்டு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், துப்புரவு பணியாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.ப.வேலூர் அடுத்த நல்லூர் கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் வீராசாமி (38). அவர், நாமக்கல் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணிக்கு, நாமக்கல்லில் இருந்து நல்லூர் கந்தம்பாளையத்துக்கு தனது மனைவியுடன், 'டி.வி.எஸ். எக்ஸல்' மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.அப்போது, கோலாரம் அடுத்த காட்டூர் அருகே வந்தபோது, எதிரே மற்றொரு 'டி.வி.எஸ். எக்ஸல்' மொபட்டில் வந்த தம்பதியினர் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வீராசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.அவரது மனைவி மற்றும் மற்றொரு வாகனத்தில் வந்த தம்பதியினர் என மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து நல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்

நாமக்கல்: நாமக்கல் அடுத்த களங்காணி, ஏளூர்பட்டி ராஜாபாளையம் தெய்வானையம்மாள் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வராசு தலைமை வகித்து, துவக்கி வைத்தார். ஆசிரியர் பணியின் நோக்கம், அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கல்வி நிறுவன நிர்வாகிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

மின் கசிவால் குடிசை வீடு சாம்பல்

மோகனூர்: மின்கசிவால் ஏற்பட்ட தீப்பொறி, குடிசை வீட்டின் மேல் விழுந்ததில், வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.மோகனூர் அடுத்த ஒருவந்தூர்புதூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. அவரது குடிசை வீட்டில் செல்வராஜ் (35) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் 3 மணிக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டது. அப்போது எழுந்த தீப்பொறி, செல்வராஜ் குடிசை வீட்டின் மேல் விழுந்தது.அதனால், வீடு எரியத்துவங்கியது. தகவலறிந்த நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில், குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலனாது.அதில் இருந்து துணிகள், சாமான்கள், 3,000 ரூபாய் ரொக்கம், மளிகை பொருட்கள் என அனைத்தும் எரிந்து நாசமானது. மோகனூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பைப் லைன் உடைத்து சேதம்: இருவர் கைது

ப.வேலூர்: விவசாய நிலத்தில் போடப்பட்ட பைப் லைனை உடைத்து சேதப்படுத்திய இரண்டு பேரை, நல்லூர் போலீஸார் கைது செய்தனர்.ஜமீன் இளம்பிள்ளை, இ.நல்லாகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள்(40). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (46) என்பவருக்கும் இடையே பொதுவான கிணறு உள்ளது. அந்த கிண்றில் இருந்து தண்ணீர் எடுத்து பாய்ச்சுவது சம்பந்தமாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.இந்நிலையில், கடந்த, 25ம் தேதி கண்ணம்மாள், தோட்டத்தில் பைப் லைன் போட்டுள்ளார். நேற்று முன்தினம் பிரபாகரன் உள்ளிட்ட, 10 பேர் கொண்ட கும்பல், அந்த பைப் லைனை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்து கண்ணம்மாள், நல்லூர் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, பிரபாகரன் அவரது மைத்துனர் விஜயகாந்த் (32) ஆகியோரை கைது செய்தனர்.

பி.ஜி.பி., கல்வி நிறுவனம் பேராசிரியருக்கு பயிற்சி

நாமக்கல்: நாமக்கல் பி.ஜி.பி., கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை நடந்தது.

கல்வி நிறுவன தாளாளர் கணபதி தலைமை வகித்தார். முதல்வர் முகமது ஷெரீப் வரவேற்றார். கல்வி நிறுவன துணைத்தலைவர் விசாலாட்சி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பெரியார் பல்கலை துறைத்தலைவர் நிர்மலா, சென்னை சைதாப்பேட்டை கல்வியல் மேம்பாட்டு நிறுவன கல்வியியல் துறை தலைவர் நிர்மலாதேவி, தஞ்சை ஸ்கில்ஜோன் தலைமை பயிற்சியாளர் லதா, ராஜபாளையம் ராஜூஸ் கல்லூரி பேராசிரியர் வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.பயிற்சி பட்டறையில், ஆறு கல்லூரிகளை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், கல்வி நிறுவன முதல்வர்கள் விவேகானந்தன், ரவிக்குமார், கலியபெருமாள், மங்கையர்கரசி, அருணாசலம், துணை முதல்வர் முகமது நூருன்னிசா உள்பட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டி முத்தாயம்மாள் கல்லூரி மாணவர் சாதனை

ராசிபுரம்: மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டியில், ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.சேலம், தாதகாப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில், கல்லூரிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டி நடந்தது. போட்டியில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து, 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.அதில், முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவர் சக்திவேல், 500 கிலோ எடை பிரிவிலும், மாணவர்கள் சிவபாலன், அருண்குமார் ஆகியோர், 470 கிலோ மொத்த எடை பிரிவிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.மாணவர்கள் கார்த்திக், குமரேசன் ஆகியோர், 467.5 கிலோ மற்றும், 450 கிலோ மொத்த எடையை தூக்கி இரண்டாமிடம் பெற்றனர். மகளிர் பிரிவில், 210 கிலோ எடை பிரிவில் மாணவியர் கதீஜா, பிரியா, 230 கிலோ மொத்த எடையை தூக்கி முதலிடமும், மாணவியர் தவமணி, சிவகாமி ஆகியோர், 205 கிலோவும், தெய்வத்தாய், 180 கிலோ, தனலட்சுமி, 230 கிலோ, கலைவாணி, 160 கிலோ என மொத்த எடையை தூக்கி இரண்டாமிடம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, கல்லூரி தாளாளர் ராமசுவாமி, செயலாளர் முத்துவேல், முதல்வர் செல்வகுமரன், மாணவர் நலன் டீன் ஸ்டெல்லாபேபி, உடற்கல்வி இயக்குனர்கள் ஜெயந்தி, ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.

ஞானமணி கல்லூரியில் 'ஞான் புக் எக்ஸ்போ 2011'

ராசிபுரம்: ராசிபுரம், ஞானமணி கல்லூரி நூலகத்துறை சார்பில், 'ஞான் புக் எக்ஸ்போ- 2011' என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி நடந்தது.கல்வி நிறுவன தலைவர் அரங்கண்ணல் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பாஸ்கரன் வரவேற்றார். கல்லூரி முதன்மை செயல் அதிகாரி விவேகானந்தன், நிர்வாக அதிகாரி பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் மாலாலீனா கண்காட்சியை துவக்கி வைத்தார்.மாணவ, மாணவியரிடையே புத்தகம் படிக்கும் ஆர்வத்தை துண்டும் விதமாகவும், அதன் மூலம் தொழில் நுட்பத் திறனை மேம்படுத்தவும், தொழில் நுட்ப தகவல்களை பெறவும் இக்கண்காட்சி அமைந்தது.கண்காட்சியில், ஞானமணி கல்வி நிறுவனத்தின் நூலகத்துறையில் இருந்தும், 25க்கும் மேற்பட்ட புத்தக வெளியீட்டாளர்களின், 20 ஆயிரத்துக்கும் அதிகமான நூல்கள் இடம்பெற்றிருந்தன.நிகழ்ச்சியில், தொழில்நுட்பக் கல்லூரி துணை முதல்வர் சிவக்குமார், இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் திரவியம், நூலகர் ரமேஷ், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஏரியில் கருவேல மரம் வெட்ட முயற்சி தடைசெய்ய கலெக்டருக்கு கோரிக்கை

ராசிபுரம்: 'நீர் ஆதாரமாக விளங்கும் கருவேல மரங்களை வெட்டுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முனியப்பம்பாளையம் கிராம மக்கள், மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.அம்மனுவில் கூறியிருப்பதாவது:ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை யூனியனுக்கு உட்பட்ட வடுகம் முனியப்பம்பாளையத்தில், 19 ஏக்கர் பரப்பில் வெள்ளக்குட்டை ஏரி உள்ளது. இந்த ஏரி முழுவதும் கருவேல மரங்கள் நிறைய வளர்ந்துள்ளது. அவ்வப்போது பருவமழை பொய்த்து போனாலும், இந்த மரங்கள் ஏரிக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.மேலும், முனியப்பம்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து கிணறுகளும், இந்த ஏரியின் நீர் ஆதாரத்தை நம்பியே உள்ளது. அதை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி ஆலோசனையின் படி, பஞ்சாயத்து தலைவர், 'வெள்ளக்குட்டை ஏரியில் உள்ள கருவேல மரங்கள் அனைத்துயும் வெட்டலாம்' என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.அதன்படி மரங்களை வெட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரங்களை வெட்டுவதாக இருந்தால், மரங்களுக்கு எண்கள் இட்டும், மரத்தின் அளவு குறிப்பிட்ட பிறகே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவற்றை முறையாக செய்யாமல், மரங்களை வெட்ட அனுமதி அளித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.மேலும், உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், அதற்குள் மரங்கள் அனைத்தும் வெட்டி காசு பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில், இதில் கவனம் செலுத்துகின்றனர். அப்பகுதியில் வசித்து வருபவர்கள், ஏரியின் நிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்ததால், 19 ஏக்கரில் காணப்பட்ட வெள்ளக்குட்டை ஏரி, தற்போது சிறிய ஓடைபோல் காட்சி அளிக்கிறது.ஏரி மற்றும் அதை சுற்றிய பகுதியில் உள்ள கிணத்தடி நீர் ஆதாரத்தை காக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம்

மோகனூர்: தே.மு.தி.க., நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மோகனூரில் நடந்தது. மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான சம்பத்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் விஜயன் வரவேற்றார். மாநில மாணவரணி இணைச் செயலாளர் மகேஸ்வரன், எம்.எல்.ஏ., சாந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தே.மு.தி.க., நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினம், நகர, ஒன்றிய பகுதிகளில் கட்சிக்கொடி ஏற்றியும், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குவது, கட்சியில் தீவிர உறுப்பினர்கள் சேர்ப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.நிகழ்ச்சியில், ஒன்றிய பொறுப்பாளர் சரவணன், ஆரியூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராஜாகண்ணன், முன்னாள் மாவட்ட பொருளாளர் விஜய், ஒன்றிய அவைத்தலைவர் பாண்டியன், நகர, ஒன்றிய, கிளை கழக, சார்பு மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

ரேஷன் கார்டு வழங்கல்

திருச்செங்கோடு: தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, எம்.எல்.ஏ., சம்பத்குமார், புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார்.திருச்செங்கோடு சட்டசபை தொகுயில், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிய கார்டு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பத்தின் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, தகுதியான நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க முடிவு செய்தனர்.அதற்கான விழா, திருச்செங்கோடு எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. வட்ட வழங்கல் அலுவலர் குப்புசாமி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., சம்பத்குமார், 350 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், தே.மு.தி.க., நகரச் செயலாளர் தம்பி மனோகரன், துணைச் செயலாளர் நல்லமுத்து, ஒன்றியச் செயலாளர் செங்கோட்டையன், துணைச் செயலாளர் அறிவழகன், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

கால்நடைகளின் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வசதி: கலெக்டர்

நாமக்கல்: 'கால்நடைகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு வசதியாக ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை, கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக்கொள்ளலாம்' என, கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நாமக்கல் மாவட்ட கால்நடை வளர்ப்போர், தங்கள் கால்நடைகளை தீவிர சிகிச்சைக்காக, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையால் ஆம்புலன்ஸ் இயக்கப்படுகிறது.இந்த வசதி தேவைப்படுவோர், 04286-266491 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, கால்நடை மருத்துவமனைக்கும், தங்கள் இடத்துக்கும் போகவர ஆகும் தூரத்துக்கான உரிய கட்டணத்தை (தற்போதைய கட்டணம் கி.மீ.,க்கு எட்டு ரூபாய்) செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us