என்னை மன்னித்து விடுங்கள்: ஹசாரேக்கு திவாரி கடிதம்
என்னை மன்னித்து விடுங்கள்: ஹசாரேக்கு திவாரி கடிதம்
என்னை மன்னித்து விடுங்கள்: ஹசாரேக்கு திவாரி கடிதம்
ADDED : செப் 21, 2011 11:23 PM

புனே: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயை கடுமையாக விமர்சனம் செய்ததற்காக, அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, காங்., செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி கடிதம் எழுதியுள்ளார். ஊழலுக்கு எதிராக, டில்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டார். அதற்கு முந்தைய நாளில் நிருபர்களைச் சந்தித்த காங்., செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி, 'ஊழலின் ஒட்டுமொத்த வடிவமான ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொள்வது, வேடிக்கையான செயல்' என விமர்சித்தார். இதையடுத்து, மணிஷ் திவாரிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்போவதாக, கடந்த 8ம் தேதி, ஹசாரே தரப்பில், அவரது வழக்கறிஞர் மிலிந்த் பவார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதனால், பிரச்னையை முடித்துக் கொள்ள விரும்பிய திவாரி, மன்னிப்பு கேட்டு, அன்னா ஹசாரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். புனேயில் நேற்று நிருபர்களைச் சந்தித்த ஹசாரே வழக்கறிஞர் பவார், மணிஷ் திவாரி எழுதிய கடிதத்தின் நகலை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், '' எழுத்துப்பூர்வமாக, திவாரி மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பதால், இவ்விவகாரத்தை உடனே முடித்துக் கொள்வோம் என, ஹசாரேயும் கூறியுள்ளார்'' என்றார்.
கடிதத்தில் மணிஷ் திவாரி கூறியுள்ளதாவது: வயதில் மூத்தவரான அன்னா ஹசாரேவை விமர்சித்தது தவறு. இதுதொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 25ம் தேதியே அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டேன். என்னை விட வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை தரும்போது, சுய கவுரவம் மற்றும் தற்பெருமை போன்றவற்றுக்கு நான் முன்னுரிமை தருவதில்லை. அவ்வகையில், மீண்டும் ஒருமுறை எனது வருத்தத்தை பதிவு செய்கிறேன். சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு, இந்த விவகாரத்தை மேலும் இழுத்தடிக்க நான் விரும்பவில்லை. அதேபோல நீங்களும் இத்துடன் முடித்துக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.