மகளை கடத்திய வழக்கறிஞர் 11 மணி நேர போராட்டத்திற்கு பின் கைது
மகளை கடத்திய வழக்கறிஞர் 11 மணி நேர போராட்டத்திற்கு பின் கைது
மகளை கடத்திய வழக்கறிஞர் 11 மணி நேர போராட்டத்திற்கு பின் கைது
ADDED : செப் 06, 2011 11:20 PM

சிட்னி: ஆஸ்திரேலியத் தலைநகர் சிட்னியில் தன் மகளைக் கடத்தி வைத்துக் கொண்டு, தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய வழக்கறிஞர் ஒருவர், 11 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதனால் நேற்று சிட்னியில் பரபரப்பு நிலவியது. ஆஸ்திரேலியத் தலைநகர் சிட்னியின் புறநகர்ப் பகுதியான பராமாட்டாவில், கோர்ட் ஒன்றின் அருகில் உள்ள சட்டத் துறை அலுவலகத்திற்குள், நேற்று முன்தினம் காலை 52 வயதுடைய ஒருவர் தனது 12 வயது மகளுடன் சென்றார். அவர் தனது தலையில் வழக்கறிஞர்கள் அணியக்கூடிய 'விக்' அணிந்திருந்தார். அவர் அங்கிருந்த வரவேற்பாளரிடம், ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரைக் கூறி அவரைப் பார்த்துப் பேச வேண்டும் எனக் கேட்டார். அந்தப் பெயரில் ஒருவரும் அலுவலகத்தில் இல்லை என வரவேற்பாளர் அவரிடம் தெரிவித்தார். மகளுடன் வந்த அந்த நபரோ, வரவேற்பாளரை ஓங்கி அடித்து விட்டு, 'எனது பையில் வெடிகுண்டு இருக்கிறது. இத்தகவலை அட்டர்னி ஜெனரலிடம் சொல், போ' எனக் கூறி விட்டு உள்ளே போய்விட்டார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து அப்பகுதிக்கு வந்தனர். அருகில் உள்ள கட்டடங்களில் இருந்தவர்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். இதனால் அப்பகுதி ஆளில்லாத மயானமாக காட்சியளித்தது. அதன்பின், போலீசார் அக்கட்டடத்தை முற்றுகையிட்டனர். உள்ளே இருந்த நபரிடம் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு கட்டத்தில் அந்த நபர், அலுவலகத்தின் கண்ணாடிக் கதவை உடைத்து, சில துண்டுக் காகிதங்களை வெளியில் போட்டார். இந்த நாடகம் 11 மணி நேரம் நீடித்தது. ஒரு கட்டத்தில், அந்த நபர் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார். அதேநேரம் அவருக்குத் தெரியாமல், போலீசார் உள்ளே புகுந்து அந்த நபரைக் கைது செய்தனர். அவரால் சிறைபிடிக்கப்பட்ட சிறுமி, கதறிக் கண்ணீர் விட்டபடி அந்த அலுவலகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தாள். பின் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டாள். அந்த நபர் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருப்பதாகவும் அது குறித்து விசாரித்து வருவதாகவும் சிட்னி நகர போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் சிட்னி நகரின் மேற்குப் பகுதியில் நேற்று முன்தினம் பெரும் பரபரப்பு நிலவியது. கடந்த சில வாரங்களுக்கு முன், பயங்கரவாதி ஒருவர் தன் கழுத்தில் வெடிகுண்டைக் கட்டியிருப்பதாக புரளியைக் கிளப்பிய இளைஞர் ஒருவர், அமெரிக்காவிற்குத் தப்பியோடினார். பின் அங்கு அவர் கைது செய்யப்பட்டார். விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு அவர் தண்டனைக்கு அனுப்பப்பட உள்ளார்.