பயங்கரவாதி கொலை முயற்சி வழக்கு: அமெரிக்காவுக்கு இந்தியர் நாடு கடத்தல்
பயங்கரவாதி கொலை முயற்சி வழக்கு: அமெரிக்காவுக்கு இந்தியர் நாடு கடத்தல்
பயங்கரவாதி கொலை முயற்சி வழக்கு: அமெரிக்காவுக்கு இந்தியர் நாடு கடத்தல்
ADDED : ஜூன் 17, 2024 11:58 PM

வாஷிங்டன் : அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுானை கொலை செய்ய முயன்ற வழக்கு தொடர்பாக, நிகில் குப்தா என்ற இந்தியர், செக் குடியரசு நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அமெரிக்காவில் வசித்து வரும் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுானை கொலை செய்ய முயற்சி நடந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில், இந்திய அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
ஆனால், இதை மத்திய அரசு மறுத்தது. அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுஇருந்தது.
வெளிநாடுகளில் உளவுப் பணிகளை மேற்கொள்ளும், 'ரா' அமைப்பைச் சேர்ந்த விக்ரம் யாதவ் என்ற அதிகாரி, இந்த கொலை முயற்சியின் பின்னணியில் இருப்பதாகவும், இதற்கு, ரா அமைப்பு தலைவர் சாவந்த் கோயல் ஒப்புதல் அளித்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.
ரா அதிகாரிக்காக, ஐரோப்பிய நாடான செக் குடியரசில் வசித்து வரும் நிகில் குப்தா, 52, இந்த கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாகவும், அதற்காக பணம் கொடுத்து ஆட்களை தயார் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து நிகில் குப்தா, செக் குடியரசில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க அரசின் கோரிக்கையை ஏற்று, நிகில் குப்தாவை நாடு கடத்தும் வழக்கு, செக் குடியரசு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அவரை நாடு கடத்த செக் குடியரசு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து நிகில் குப்தா, அமெரிக்காவுக்கு நேற்று நாடு கடத்தப்பட்டதாகவும், புரூக்ளினில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.