மின் கட்டணத்தை அரசு செலுத்தாது அமைச்சர்களுக்கு முதல்வர் தந்த 'ஷாக்'
மின் கட்டணத்தை அரசு செலுத்தாது அமைச்சர்களுக்கு முதல்வர் தந்த 'ஷாக்'
மின் கட்டணத்தை அரசு செலுத்தாது அமைச்சர்களுக்கு முதல்வர் தந்த 'ஷாக்'
ADDED : ஜூன் 18, 2024 01:01 AM

குவஹாத்தி, 'வரும் 1ம் தேதி முதல், அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் வீடுகளுக்கான மின் கட்டணத்தை தங்கள் சொந்த பணத்தில் இருந்து அவர்களே செலுத்த வேண்டும்' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
சூரிய சக்தி
இங்குள்ள தலைமை செயலகத்தில் சூரிய சக்தி மின்சார திட்டத்தை முதல்வர் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
மொத்தம், 12.56 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த திட்டத்தின் வாயிலாக, மாதத்துக்கு சராசரியாக 3 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இதன் வாயிலாக அரசுக்கு மாதம் 30 லட்சம் ரூபாய் செலவு மிச்சமாகும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், சூரிய சக்தி மின்சார வசதியில் இயங்கும் முதல் தலைமை செயலகம் என்ற பெருமையை அசாம் பெறும்.
இந்நிலையில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
அனைத்து அரசு அலுவலகங்களையும் சூரிய சக்தி மின்சாரத்துக்கு மாற்றுவதே அரசின் நோக்கம். மாநிலத்தில் உள்ள பல்கலைகள், மருத்துவ கல்லுாரிகளில் இந்த திட்டத்தை துவக்கி உள்ளோம். இது படிப்படியாக விரிவடையும்.
வி.ஐ.பி., கலாசாரம்
மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நோக்கத்தில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் இரவு 8:00 மணிக்கு மின்சாரம் தானாகவே துண்டிக்கப்படும் நடைமுறையை அமல்படுத்தி உள்ளோம்.
மாநிலம் முழுதும் உள்ள 8,000 அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் இந்த திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது.
முதல்வர் அலுவலகம், உள்துறை மற்றும் நிதித்துறைகளில் மட்டும் இந்த மின் துண்டிப்பு இருக்காது. அரசு அதிகாரிகளின் சொந்த மின் கட்டணத்தை இதுவரை அரசே செலுத்தி வந்தது. இந்த வி.ஐ.பி., கலாசாரம் முடிவுக்கு வருகிறது.
வரும் 1ம் தேதி முதல் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தங்கள் சொந்த மின் கட்டணத்தை அவர்களே செலுத்த வேண்டும். அவர்களுக்கான மின்கட்டணத்தை அரசு செலுத்தாது.
நானும், தலைமை செயலரும் இதற்கு முன் உதாரணமாக எங்கள் சொந்த மின் கட்டணத்தை நாங்களே செலுத்தி இந்த நடைமுறையை துவக்கி வைக்க உள்ளோம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.