பொன்முடி மகன் குவாரியில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
பொன்முடி மகன் குவாரியில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
பொன்முடி மகன் குவாரியில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
ADDED : ஜூலை 20, 2011 08:08 PM
புதுச்சேரி: பூத்துறை கிராமத்தில், முன்னாள் அமைச்சரின் மகனுக்கு சொந்தமான குவாரியில், விதிமுறைகளை மீறி செம்மண் எடுக்கப்பட்டது குறித்து, அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியம், பூத்துறை கிராமத்தில், 87 எக்டர் விவசாய நிலத்தை, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாங்கினர். இங்கு, செம்மண் குவாரி நடத்த, 2007ல், தி.மு.க., ஆட்சியின்போது அனுமதி பெற்றனர். ஆரம்பத்தில், சிறிய பள்ளங்கள் தோண்டி செம்மண் எடுத்தனர். நாளடைவில், இயந்திரம் மூலம், 60 முதல், 80 அடிக்குமேல் மெகா பள்ளங்கள் தோண்டி, லாரி லாரியாக மண்ணை அள்ளிச் சென்றனர். அரசியல் பின்னணி கொண்ட நபர்களாக இருந்ததால், அப்போது பொறுப்பில் இருந்த உயரதிகாரிகளும், போலீசாரும் செம்மண் குவாரி பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை. செம்மண் குவாரி நடத்த, மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கியது. ஆனால், மூன்று ஆண்டுகளை தாண்டியும், தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை வரை, செம்மண் குவாரி, இரவு பகலாக செயல்பட்டு வந்துள்ளது. செம்மண்ணை, புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் விற்பனை செய்து, கொள்ளை லாபம் குவித்துவந்தனர். விதிமுறைகளை மீறி செம்மண்ணை தாறுமாறாக சுரண்டி எடுத்ததால், தோன்றிய, 'கிடுகிடு' பள்ளத்தால், நெய்வேலியில் இருந்து புதுச்சேரிக்கு உயர் மின்னழுத்த மின்சாரம் செல்லும் டவர், பூத்துறை கிராமத்தில் இருந்து வில்லியனூர் செல்லும் பாதை எந்த நேரத்திலும் இடிந்துவிழும் ஆபத்தான நிலை உருவானது. மேலும், நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படும் அபாயமும் எழுந்தது. இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, பூத்துறையில் இயங்கிவந்த செம்மண் குவாரியை, விழுப்புரம் கோட்டாட்சியர் பிரியா நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். வானூர் தாசில்தார் முத்துலட்சுமி, வி.ஏ.ஓ., மோகன், மண்டல துணை தாசில்தார் மதியழகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். பின், அடங்கல் புத்தகத்தை ஆய்வு செய்து கையொப்பமிட்டார். விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்தது தொடர்பாக, அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.


