மதுரையில் திடீர் பணக்கார ஆசையால் சித்தப்பா வீட்டில் 36 பவுன் நகை திருட்டு
மதுரையில் திடீர் பணக்கார ஆசையால் சித்தப்பா வீட்டில் 36 பவுன் நகை திருட்டு
மதுரையில் திடீர் பணக்கார ஆசையால் சித்தப்பா வீட்டில் 36 பவுன் நகை திருட்டு

மதுரை : திடீர் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில், மதுரையில் சித்தப்பா வீட்டில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 36 பவுன் நகைகளை திருடிய வினோத்குமார் உட்பட இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மதுரை வெங்கடாஜலபுரம் பொன்மாரி நகரை சேர்ந்தவர் முத்தையன் (44). பரவை காய்கறி மார்க்கெட் வியாபாரி. ஜூலை 11 மாலை முத்தையன், மனைவி லட்சுமி மற்றும் உறவினர்களுடன் சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக வடுகபட்டி சென்றனர்.
லட்சுமியின் அக்கா சாந்தி. கணவர் முருகேசன். இவர்களின் மகன் வினோத்குமார் (24). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் டெய்லர். குடும்ப பிரச்னை தொடர்பாக பேச மதுரை வந்த வினோத்குமார், சித்தப்பா முத்தையன் வீட்டில் தங்கினார். முத்தையன் வடுகபட்டி சென்றபோது, வீட்டு சாவியை கொடுத்து, தனது குழந்தைகளை கவனித்துக்கொள்ளும்படி கூறினார்.
நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வினோத்குமார் மொபைல்போனில் முத்தையனிடம், 'தான் வீட்டை பூட்டி வெளியில் சென்று வந்தபோது, கதவு திறந்திருந்தது. மிளகாய் பொடி தூவப்பட்டு, பீரோக்கள் திறந்து கிடக்கிறது,' என்றார்.
நகை 36 பவுன், மொபைல்போன், கேமரா, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, 1000 ரூபாய் திருடுபோனது பற்றி நள்ளிரவு 11 மணிக்கு சுப்பிரமணியபுரம் போலீசில் முத்தையன் புகார் செய்தார்.
துணைக் கமிஷனர் செந்தில்குமார், உதவிக் கமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில் இளந்திரையன், அண்ணாதுரை, எஸ்.ஐ.,கள் சீனிவாசன், முருகன், கணேசன், பூங்கொடி, சிவப்பிரகாஷ், போத்திராஜ், சாந்தகுமார் விசாரணை நடத்தினர்.
திடீர் பணக்காரர்கள் ஆக வேண்டும்; டிராவல்ஸ் நிறுவனம் துவங்க வேண்டும்; கொள்ளையடித்ததை சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் வினோத்குமார், சிக்கந்தர்சாவடியை சேர்ந்த டெய்லர் கருப்பசாமி (25)யுடன் திருடியது தெரியவந்தது. புகார் கொடுத்த 5 மணி நேரத்தில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
குமாரம் அருகே அறிவூரைச் சேர்ந்த சங்கையா(45)விடம் கொடுத்து வைத்திருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசாரை கமிஷனர் கண்ணப்பன் பாராட்டினார்.
கெடுத்த சினிமா(!) : யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது; போலீஸ் மோப்பநாய் கண்டுபிடித்துவிடக்கூடாது; போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் மிளகாய்பொடியை தூவியுள்ளனர். இது'கில்லி' சினிமாவில், போலீசிடமிருந்து தப்பிக்க கதாநாயகன் விஜய் கையாளும் உத்தி. இதையே வினோத்குமார், கருப்பசாமி கையாண்டுள்ளனர். சினிமா மோகம் இளைஞர்களை எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதற்கு இச்சம்பவம் உதாரணம்.


