வனவிலங்குகளால் மனித உயிரிழப்பு இழப்பீடு தொகை ரூ.3 லட்சமாக உயர்வு
வனவிலங்குகளால் மனித உயிரிழப்பு இழப்பீடு தொகை ரூ.3 லட்சமாக உயர்வு
வனவிலங்குகளால் மனித உயிரிழப்பு இழப்பீடு தொகை ரூ.3 லட்சமாக உயர்வு
சென்னை : ''வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகை, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்,'' என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில் விதி எண் 110 கீழ், முதல்வர் ஜெயலலிதா அளித்த அறிக்கை: வனவிலங்குகளால் மனித உயிரிழப்பு ஏற்படும் போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து, மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
வனவிலங்குளால் ஆடு, செம்மறியாடு, பன்றி போன்ற கால்நடைகள் இழப்பு ஏற்பட்டால், இதுவரை அனைத்துக்கும் 1,000 ரூபாய் என்ற வீதத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இனி, அந்தத் தொகை ஆட்டுக்கு 2,000 ரூபாய் என்ற அளவிலும், செம்மறி ஆட்டுக்கு 1,500 ரூபாய் என்ற அளவிலும், பன்றிக்கு 1,000 ரூபாய் என்ற அளவிலும் வழங்கப்படும். கோழி போன்ற, வீட்டில் வளர்க்கப்படும் பறவை இனங்களுக்கு இழப்பு ஏற்பட்டால், இதுவரை 30 ரூபாய் என்ற அளவில் இருந்த இழப்பீட்டுத் தொகை, இனி பறவைக்கு 100 ரூபாய் என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும். வன விலங்குகளால் உடைமைகளுக்கு இழப்பு ஏற்பட்டால், உண்மையான இழப்பின் அளவு அல்லது 100 ரூபாய், இவற்றில் எது அதிகமோ, அந்தத் தொகை இழப்பீட்டுத் தொகையாக இதுவரை வழங்கப்பட்டது. இனி, வன விலங்குகளால் உடைமைகள் இழப்பு ஏற்பட்டால், 2,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


