மாயாவதியை குறிவைக்கும் மத்திய தணிக்கைக் குழு
மாயாவதியை குறிவைக்கும் மத்திய தணிக்கைக் குழு
மாயாவதியை குறிவைக்கும் மத்திய தணிக்கைக் குழு
ADDED : ஆக 06, 2011 01:07 PM
புதுடில்லி : லக்னோவில் அம்பேத்கார் மற்றும் கன்ஷிராம் ஆகியோரின் நினைவு பூங்கா அமைப்பதற்காக ரூ.66 கோடியை மாயாவதி அரசு வீணடித்திருப்பதாக உ.பி., முதல்வர் மாயாவதி மீது மத்திய தணிக்கைக் குழு ஊழல் குற்றம் சுமத்தியுள்ளது.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரின் நேற்றைய கூட்டத்தில் மத்திய தணிக்கை குழு, சுமார் 800 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் காமன்வெல்த் போட்டிகளின் போது நடைபெற்ற முறைகேடுகளில் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்திற்கும் பங்கு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மீதான ஊழல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், எந்நேரமும் வழக்கு போடப்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் ஷீலா தீட்சித்தை தொடர்ந்து உத்திர பிரதேச முதல்வர் மாயாவதியும் ஊழல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக மத்திய தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
மத்திய தணிக்கைக் குழு நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : உத்திர பிரதேச அரசு அமைத்துள்ள நினைவு பூங்காவில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் மற்றும் மணல் ஆகியவை லக்னோவில் இருந்து 1100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது; இதற்காக ரூ.15 கோடி செலவிடப்பட்டுள்ளது; கட்டுமான பொருட்களுக்கான கற்களை வாங்குவதற்கு ரூ.22 லட்சத்திற்கும் மேல் பணம் செலவிடப்பட்டுள்ளது; நினைவு பூங்காவில் சிலைகள் அமைப்பதற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்ற விபரத்தை உத்திர பிரதேச அரசு வெளியிடவே இல்லை; இருப்பினும் அதற்கான செலவு தொகை ரூ.287.56 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஒதுக்கிய பணத்தை மாயாவதி தலைமையிலான உத்திர பிரதேச அரசு பூங்காக்கள், சிலைகள் அமைத்து வீணடித்துள்ளதற்கு காங்கிரஸ், பா.ஜ., சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.