/உள்ளூர் செய்திகள்/மதுரை/பா.ம.க., நிர்வாகி இளஞ்செழியன் பழிக்குப்பழியாக கொலைபா.ம.க., நிர்வாகி இளஞ்செழியன் பழிக்குப்பழியாக கொலை
பா.ம.க., நிர்வாகி இளஞ்செழியன் பழிக்குப்பழியாக கொலை
பா.ம.க., நிர்வாகி இளஞ்செழியன் பழிக்குப்பழியாக கொலை
பா.ம.க., நிர்வாகி இளஞ்செழியன் பழிக்குப்பழியாக கொலை
ADDED : ஜூலை 27, 2011 04:56 AM
மதுரை : மதுரையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் இளஞ்செழியனை,42, சுமோ காரில் வந்த கும்பல் நேற்று காலை 7.30 மணிக்கு பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்தது.
இதுதொடர்பாக அவனியாபுரத்தை சேர்ந்த காசிவிஸ்வநாதன், 32, என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றவர்களை தேடி வருகின்றனர்.மதுரை பைபாஸ் ரோடு வேல்முருகன் நகரில் வசித்தவர் இளஞ்செழியன். நேற்று காலை குழந்தையை பள்ளி பஸ்சில் அனுப்பி விட்டு, டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வானமாமலை நகர் - வேல்முருகன் நகர் ரோடு சந்திப்பில், சுமோ கார் ஒன்று வேகமாக அவர் மீது மோத, இளஞ்செழியன் தடுமாறி விழுந்தார். காரில் இருந்து இறங்கிய 8 பேர், பட்டா கத்தியால் அவரது கழுத்தை குறிவைத்து வெட்டி விட்டு தலைமறைவாயினர். இதில் கழுத்து, பாதி துண்டான நிலையில் சம்பவ இடத்திலேயே இளஞ்செழியன் இறந்தார். ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திட்டமிட்டு, பழிக்குப்பழியாக நடத்தப்பட்ட இக்கொலை போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுதொடர்பாக, அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த பி.பி.ஏ., பட்டதாரி காசிவிஸ்வநாதன்,32, என்பவர் திடீர்நகர் போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர். பின்னணி என்ன?: இளஞ்செழியன், 2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அவனியாபுரம் 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க., சார்பில் போட்டியிட்டார். எதிர்த்து போட்டியிட்டவர் புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளராக இருந்த சிற்றரசு. தேர்தல் தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.இதற்கிடையே, சிற்றரசுவின் உறவினர் காசிவிஸ்வநாதனின் தங்கை காசியம்மாளை, இளஞ்செழியனின்
மைத்துனர் அன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடிபோதையில் தினமும் காசியம்மாளை அடித்து துன்புறுத்திய அன்புவை, 2007 டிச.,13ல் காசிவிஸ்வநாதன் தலைமையில் 6 பேர் வெட்டிக் கொலை செய்தனர். இதனால், சிற்றரசு தரப்பினருக்கும், இளஞ்செழியன் தரப்பினருக்கும் பகை வளர்ந்தது. அடிக்கடி தகராறில் ஈடுபட்டு, அவனியாபுரம் போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தினர்.இச்சூழலில், 2009 ஜூன் 16ல் இளஞ்செழியன் தம்பி இருளப்பனை, சிற்றரசு தரப்பினர் வெட்டிக் கொலை செய்தனர். பழிக்குப்பழியாக அன்றிரவே சிற்றரசு மகன் விஜயதுரை கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இளஞ்செழியன், அவரது சகோதரர்கள் மாரி, செல்வம் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அரசியலில் நுழைந்தது எப்படி?: மீன் குத்தகை எடுத்து வந்த இளஞ்செழியன், ஆரம்பத்தில் பா.ம.க.,வில் உறுப்பினராக சேர்ந்தார். கட்சி ஆர்ப்பாட்டங்களுக்கு ஆட்களை திரட்டி, தலைமையின் கவனத்தை ஈர்த்தார். இதனாலேயே 2005ல் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். பின், 2007ல் மாநில துணை பொதுச்செயலாளரானார். சில மாதங்களிலேயே மாநில தொண்டரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2008 ஜூன் 18ல் மதுரை எலியார்பத்தி அருகே ஜாரிபுதுக்கோட்டையில் உள்ள அவரது தோட்டத்தில், வெடிகுண்டு தயாரித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின், விஜயதுரை கொலை தொடர்பாகவும் அவர் கைதானதால், மாநில பதவி பறிக்கப்பட்டு, மதுரை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். மூன்று மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில் சோழவந்தான் தொகுதி(தனி) வேட்பாளராக போட்டியிட்டார். இதற்காக மீண்டும் அவருக்கு மாநில துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அரசியலில் தீவிரமாக ஈடுபடவும், பாதுகாப்பு கருதியும் கடந்தாண்டு, குடியிருப்புகள் நிறைந்த வேல்முருகன் நகரில் அபார்ட்மென்ட் வீட்டில் குடும்பத்துடன் இளஞ்செழியன் குடிபெயர்ந்தார். அன்புமணி அஞ்சலி : நேற்று மதியம் அரசு ஆஸ்பத்திரியில் இளஞ்செழியன் உடலுக்கு கட்சியின் பசுமை தாயக நிறுவனர் அன்புமணி, மாஜி மத்திய அமைச்சர் மூர்த்தி அஞ்சலி செலுத்தினர். பின், ஊர்வலமாக உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அவனியாபுரத்தில் தகனம் செய்யப்பட்டது.இக்கொலையில் சிற்றரசு மற்றும் காசிவிஸ்வநாதனின் சகோதரர்கள் சந்திரசேகரன், செல்வராஜ், காசிராஜன், கதிரேசன், தனராஜ் போன்றோருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை எஸ்.எஸ்.காலனி போலீசார் தேடி வருகின்றனர். இளஞ்செழியன் மீது என்னென்ன வழக்குகள்?: சோழவந்தான் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட போது, தன் மீதான வழக்குகள் குறித்து, இளஞ்செழியன் தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்திருந்த விபரம்: அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷனில், 2006ல் கொலை முயற்சி மற்றும் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் இல்லை. இதே ஸ்டேஷனில், 2009ல் கொலை முயற்சி வழக்குப்பதிவு
செய்யப்பட்டது. இது விசாரணையில் இருக்கிறது. இதே ஆண்டில் மற்றொரு கொலை முயற்சி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. பின், இதே ஸ்டேஷனில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதிலும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. கடந்தாண்டு ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 2008ல் பெருங்குடி போலீசாரால், வெடிபொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளது.அன்புமணி வேதனை: மதுரையில் கொலை செய்யப்பட்ட பா.ம.கா., துணை செயலாளர் இளஞ்செழியன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அன்புமணி, நிருபர்களிடம் கூறுகையில், ''இளஞ்செழியன் கட்சியின் அடிமட்ட தொண்டனாக பணியாற்றினார். இக்கொடூர கொலை மனவேதனையை அளிக்கிறது. இதை யாராலும் ஏற்க முடியாது. இதை யார் செய்திருந்தாலும், அவர்கள் எந்தக் கட்சியினரானாலும், பிடித்து தண்டனை தரவேண்டும். இளஞ்செழியன் குடும்பத்திற்கு பாதுகாப்பு தரவேண்டும். அவரது மறைவு கட்சிக்கு பெரும் இழப்பாகும்,'' என்றார்.