Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம் அவசியம்:25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறுமா?

திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம் அவசியம்:25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறுமா?

திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம் அவசியம்:25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறுமா?

திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம் அவசியம்:25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறுமா?

ADDED : ஆக 23, 2011 11:47 PM


Google News
திருக்கோவிலூர் : திருக்கோவிலூரில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் 25 ஆண்டுகால கனவு கிடப்பில் உள்ளது.

திருக்கோவிலூர் மலையமாநாட்டின் தலைநகரம், காலப்போக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்ததையடுத்து, 1886ம் ஆண்டு பஞ்சாயத்தாக அங்கீகரிக்கப்பட்டது. இதனையடுத்து 66 ஆண்டுகளுக்கு பிறகு 24.4.1952ல் முதல் நிலை பேரூராட்சி அந்தஸ்தை பிடித்தது. தொடர்ந்து 23.3.1966ம் தேதி தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. திருக்கோவிலூர் தனக்கென்று தனி அந்தஸ்தை பெற்றதற்கு காரணம் முதல் ஆழ்வார்கள் அவதரித்தது, அவ்வை, கபிலர் உள்ளிட்டோருடன் ரகூத்தமர் ஜீவசமாதியடைந்தது, ஞானானந்தகிரி சுவாமிகள் முக்தியடைந்த இடம் என பல்வேறு சிறப்புகளை கூறலாம். அத்துடன் உலகளந்த பெருமாள் கோவில், வீரட்டானேஸ்வரர் கோவில் என சைவமும், வைணவமும் ஒருங்கே கொண்டுள்ளதும் முக்கிய காரணம். ஒருங்கினைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது கூட தனது தனித்தன்மையை இழக்காமல் திருக்கோவிலூர், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை தாலுகாவை உள்ளடக்கி வருவாய் கோட்டாட்சியர் தலைமை இடமாக திருக்கோவிலூர் விளங்கியது. கடந்த 1995ம் ஆண்டு விழுப்புரம், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பிறந்தது. அதன் பிறகு உள்ளூர் அரசியல்வாதிகளின் போட்டா போட்டி தலைதூக்கியது. நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த எடுக்கும் எந்த வளர்ச்சி பணியாக இருந்தாலும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தனர். இதனால் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என 25 ஆண்டுகால மக்களின் கோரிக்கை இன்றுவரை கனவாகவே இருந்து வருகிறது. தற்போது 49 சென்ட் பரப்பளவில் பஸ் நிலையம் இயங்கி வருகிறது. இதிலும் 20 சென்ட் வாடகை இடம் என்பது குறிப்பிடத் தக்கது. குறுகலான இந்த இடத்தில் தினசரி 450 பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என்பதால் டிரைவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. பஸ்சை பிடிக்க ஒவ்வொரு நாளும் 15 ஆயிரம் பயணிகள் பஸ் நிலையத்திற்கு வருகின்றனர். இவர்கள் ஒதுங்ககூட இடமில்லாமல் திண்டாடுவதுதான் வேதனை. இதனால் நகரவாசிகள் மட்டுமின்றி, சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இப்பகுதி மக்கள் 25 ஆண்டுகளாக நம்பி ஏமாந்ததுதான் மிச்சம். அவ்வப்போது பொறுப்பேற்கும் கலெக்டர்களும், ஆட்சிக்கு வரும் அமைச்சர்களும் பஸ் நிலையத்தை அமைத்தே தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு இடம் தேர்வு செய்வதற்கு நகருக்கு வருவது வழக்கம். வந்த வேகத்தில் இருக்கும் பிரச்னைகளை பார்த்துவிட்டு அந்த கோப்பை பிரிக்காமல் ஒதுங்கிக் கொள்வது வாடிக்கையாக நடந்து வந்தது. கடந்த சட்டசபை தேர்தலில் இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தி.மு.க.,வும் சரி, முதல் முறையாக சட்டசபையில் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் களமிறங்கிய தே.மு.தி.க.,வும் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை முன்வைத்தே தேர்தலை சந்தித்தனர். தற்போதுள்ள பஸ் நிலையம் பின்பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் தரப்பினர் புதிய பஸ் நிலையத்திற்காக மூன்றரை ஏக்கர் இடம் அளித்தனர். அந்த இடம் பஸ் நிலையம் அமைக்க போதுமானதாக இல்லை என நிராகரிக்கப் பட்டது. செவலை ரோட்டில் கம்போஸ்ட் இடமும் போதுமானதாக அமையவில்லை. தற்போது பழமையான கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பேரூராட்சி அலுவலகம், பழுதடைந்த பேரூராட்சி திருமண மண்டபம், வனத்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு அந்த இடத்தை தற்போது இருக்கும் பஸ் நிலையத்துடன் இணைத்து விரிவுபடுத்த வேண்டும் என்பது ஒரு தரப்பினரின் கோரிக்கை. இதற்கான முயற்சி குறித்து தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடேசன், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். எது எப்படியாக இருந்தாலும் எதிர்கால மக்கள் தொகை, வாகன பெருக்கத்தை கணக்கில் கொண்டு 10 ஏக்கர் பரப்பளவில் நகருக்கு வெளியில் புதிய பஸ் நிலையத்தை உருவாக்கினால், போக்குவரத்து நெரிசல் குறைந்து நகரம் வளர்ச்சியடைய முடியும். கடந்த 25 ஆண்டுகாலமாக நகர மக்களின் கனவை நிறைவேற்றுவதற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us