
தி.மு.க., முன்னாள்அமைச்சர் நேரு: திருச்சியில் இடைத்தேர்தல் வருகிறது என்பதற்காக தி.மு.க.,வினர் மீது அதிகாரிகள் பொய் வழக்கு போடுகின்றனர்.
டவுட் தனபாலு: அப்படின்னா, மதுரை மாவட்டச் செயலர் தளபதி கைது, சேலம் மாவட்டச் செயலர் வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்கு எல்லாம் வந்திருக்கே... அங்கேயும் இடைத்தேர்தல் ஏதாவது வருதா, என்ன...?
தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா: வீரபாண்டி ஆறுமுகம், போலீஸ் காவலில் உள்ளார். மதுரை மாநகர செயலர் சிறையில் உள்ளார். தற்போது நேருவுக்கு குறிவைத்துள்ளனர். தொண்டர்கள் சோர்வடையக் கூடாது. நாம் அனைவரும் மாவட்டச் செயலர்கள் போல செயல்பட வேண்டும்.
டவுட் தனபாலு: நீங்க பேசறதைப் பார்த்தா, ஏதோ கட்சி மேல அக்கறை காட்டற மாதிரி தெரியலையே... மாவட்டச் செயலர் பதவிமேல குறிவச்சிருக்கிற மாதிரில்ல தெரியுது...!
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்: உள்நாட்டுக்குள் இருந்தபடி செயல்படும் அமைப்புகளால், நமக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படுகிறது. பல்வேறு விதமாக இவர்கள் செயல்படுகின்றனர். குண்டுகளை தயாரிப்பதிலும், அவற்றை, ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதிலும், அவர்கள் திறமையாக செயல்படுகின்றனர்.
டவுட் தனபாலு: அவங்க எவ்வளவு திறமையா செயல்பட்டா தான் என்ன...? 'பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்'னு நீங்க தான், அவங்களை விட திறமையா அறிவிக்கை விட்டு, மேட்டரையே முடிச்சுடுவீங்களே...!