மேட்டூர் அணை நீர்மட்டம் இருமாதத்தில் 36 அடி சரிவு
மேட்டூர் அணை நீர்மட்டம் இருமாதத்தில் 36 அடி சரிவு
மேட்டூர் அணை நீர்மட்டம் இருமாதத்தில் 36 அடி சரிவு
ADDED : ஆக 05, 2011 12:47 AM
மேட்டூர்:மேட்டூர் அணை நீர்மட்டம், இரு மாதத்தில், 36 அடி சரிந்துள்ளது.
நீர்மட்டம், 80 அடியாக குறைந்ததால், ஒரு ஆண்டுக்கு மேலாக நீரில் மூழ்கியிருந்த நிலப்பரப்புகள் வெளியில் தெரிய துவங்கியுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம், ஜூன் 6ம் தேதி, 116 அடியாகவும், நீர் இருப்பு, 87.5 டி.எம்.சி,யாகவும் இருந்தது. ஜூன் 6ம் தேதி முதல் டெல்டா குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் மளமளவென சரிய துவங்கியது.
ஆண்டுதோறும் ஜூலை மாதம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும். நடப்பாண்டில் நீர்பிடிப்பு பகுதியில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் மேட்டூர் அணைக்கு எதிர்பார்த்த அளவில் நீர்வரத்து கிடைக்கவில்லை. ஜூன்1 முதல் நேற்று வரை அணைக்கு, 60.737 டி.எம்.சி., நீர் வரவேண்டும்.
நேற்று வரை, 33.432 டி.எம்.சி., நீர்மட்டுமே வந்துள்ளது. இன்னமும், 27.305 டி.எம்.சி., நீர் வர வேண்டும். இரு மாதத்தில் டெல்டா பாசனத்துக்கு, 75 டி.எம்.சி., நீர் திறந்துள்ளதாலும், நீர்வரத்து குறைந்து விட்டதாலும் நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம், 79.900 அடியாகவும், நீர் இருப்பு, 41.856 டி.எம்.சி.,யாகவும் குறைந்து விட்டது. கடந்த இரு மாதத்தில் அணை நீர்மட்டம், 36 அடியும், நீர் இருப்பு, 46 டி.எம்.சி.,யும் குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருவது பொதுப்பணித்துறை அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.