பா.ம.க.,வின் நிலை கண்டு மன உளைச்சல்: ஜி.கே. மணி வேதனை
பா.ம.க.,வின் நிலை கண்டு மன உளைச்சல்: ஜி.கே. மணி வேதனை
பா.ம.க.,வின் நிலை கண்டு மன உளைச்சல்: ஜி.கே. மணி வேதனை
ADDED : மே 30, 2025 12:18 PM

விழுப்புரம்: பா.ம.க.,வின் நிலை கண்டு மனவேதனையிலும் உளைச்சலிலும் இருக்கிறேன் என்று அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி. கே. மணி கூறி உள்ளார்.
பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரின் மகனும், கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது. அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமதாசின் குற்றச்சாட்டுகள் ஒரு பக்கம் இருக்கும் நிலையில், கட்சியின் மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் அன்புமணி இன்று முக்கிய ஆலோசனைக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் இந்த கூட்டத்தில் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பாமக சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் ஆகியோர் தைலாபுரத்தில் ராமதாசை சந்திக்க வந்திருந்தனர்.
அங்கு ஜி. கே. மணியிடம் நிருபர்களிடம் பா.ம.க.,வில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கேள்விகள் ஏழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது;
நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். அதற்கு எனக்கு என்ன சொல்வது என்று ஒன்றும் தெரியவில்லை. மன உளைச்சலாகவும், நெருக்கடியான சூழலாகவும் உள்ளது. பா.ம.க., ஒரு பலமான கட்சி. தனித்தன்மையுடன் இருக்கக்கூடிய கட்சி. கொள்கையோடும், லட்சியத்தோடும் இருக்கும் கட்சி.
ஒரு நெருக்கடியான சூழலுக்கு உருவாகி உள்ளதால் வேதனைப்படுகிறோம், கஷ்டப்படுகிறோம். நான் எதுவும் சொல்லக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் திரும்ப திரும்ப கேட்பதால் சொல்ல வேண்டியதாக இருக்கிறேன். இல்லை என்றால் நான் பாட்டுக்கு ஓடியிருப்பேன்.
இது மறுபடியும் சீராக வேண்டும், மீண்டும் பழைய நிலைக்கு, குடும்ப பாசத்தோடு, வலிமையான கட்சியாக மாறவேண்டும். ஒரு பெரிய மாநாட்டை சந்தித்த கட்சி, தேர்தல் நேரத்தில் மிக வலிமையாக இருக்க வேண்டும். நாங்கள் தீவிரமாக முயற்சி பண்ணுகிறோம். அதற்காக தான் வந்திருக்கிறோம்.
மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதிகமான கேள்விகள் கேட்டு, அதற்கு பதில் சொல்லக்கூடிய நிலைமையில் நான் இல்லை. எதை பற்றி சொல்வது என்று தெரியவில்லை.
எங்கள் கட்சியில் உள்ள நெருக்கடியை எங்கள் வாயால் சொல்லக் கூடாது, பேசக்கூடாது. அது நல்லதும் இல்லை. எந்த கேள்விக்கும் பதில் சொல்ல கூடிய நிலையில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே ராமதாசும், அன்புமணியும் ஒன்று சேராவிட்டால் தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என் று பா.ம.க.,வின் சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் கூறி இருக்கிறார். அன்புமணி ஆலோசனைக் கூட்டத்துக்கு செல்லாமல் ஜி. கே. மணி போன்று, அருளும் தைலாபுரம் வந்துள்ளார்.