Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருப்பூர் சாய ஆலைகள் மூடல் பிரச்னை : சென்னையில் இன்று முத்தரப்பு கூட்டம்

திருப்பூர் சாய ஆலைகள் மூடல் பிரச்னை : சென்னையில் இன்று முத்தரப்பு கூட்டம்

திருப்பூர் சாய ஆலைகள் மூடல் பிரச்னை : சென்னையில் இன்று முத்தரப்பு கூட்டம்

திருப்பூர் சாய ஆலைகள் மூடல் பிரச்னை : சென்னையில் இன்று முத்தரப்பு கூட்டம்

ADDED : ஜூலை 28, 2011 01:03 AM


Google News

திருப்பூர் : திருப்பூர் சாயத்தொழில் பிரச்னை தொடர்பான முத்தரப்பு கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது.

மூன்றாவது முறையாக நடக்கும் இப்பேச்சுவார்த்தை, முதல்வர் முன்னிலையில் நடந்தால், முழு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக, தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

'குட்டி ஜப்பான்' என பெயரெடுத்த திருப்பூர், சாயத்தொழில் பிரச்னையால் துயரத்தில் சிக்கி தவிக்கிறது. பின்னலாடை ஏற்றுமதி தொழிலின் முதுகெலும்பாக திகழும், சாயத்தொழில் முடங்கியதால், உள்நாட்டு வர்த்தகம், ஏற்றுமதி வர்த்தகம் மட்டுமின்றி, 'காம்பாக்டிங்', 'ரைசிங்,' 'எம்ப்ராய்டரிங்', 'காலண்டரிங்', 'பிரின்டிங்' என, ஒட்டுமொத்த பின்னலாடை தொழிலும் ஸ்தம்பித்துள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர்.

ஆறு மாதமாக மூடப்பட்டுள்ள சாய ஆலைகளை திறக்க, அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீண்ட முயற்சிக்கு பின், அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்தை மட்டும், நிபந்தனையுடன் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐ.ஐ.டி.,) அங்கீகாரம் பெற்ற, இயற்கை முறையில் ஆவியாக்கும் தொழில்நுட்பம் குறித்து, முதல்வரிடம் விளக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி., அங்கீகாரம் பெற்ற அத்தொழில்நுட்பத்தை செயல்படுத்த, அரசு அதிகாரிகள் இசைவு தெரிவித்து வருகின்றனர். 'நிப்ட்-டீ' கல்லூரியில் பசுமை ஜவுளி இயக்கத்தினரும், முதல்வரை சந்திக்க முயற்சித்து வருகின்றனர்.

சாயக்கழிவு நீரை இயற்கை முறையில் ஆவியாக்கும்போது, தினமும், 3,000 டன்னுக்கும் அதிகமான விறகை எரிக்க தேவையில்லை. ஒவ்வொரு ஆலையிலும், 150 எச்.பி., மோட்டார் இயங்க தேவையில்லை; 7.5 எச்.பி., மோட்டார் இயங்கினால் போதும். எந்தவகையிலும் காற்று மாசுபடுவதில்லை. இயந்திர ஆவியாக்கலின்போது, ஒரு லட்சம் லிட்டர் கழிவுநீரை ஆவியாக்க, ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இயற்கை முறையில் ஆவியாக்கும்போது, அதே அளவு கழிவுநீருக்கு, 2,500 முதல் 4,000 ரூபாய் மட்டுமே செலவாகிறது. குறைந்த செலவில், விவசாயம் பாதிக்கப்படாத வகையில், இயற்கை முறையில் ஆவியாக்குவதால், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் சாத்தியமாகும் என, ஐ.ஐ.டி., அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தொழில் அமைப்புகள், விவசாயிகளுக்கு அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தை முதல்வர் முன்னிலையில் நடந்தால், இப்பிரச்னைக்கு முழு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக, தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் தொழில் அமைப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''திருப்பூர் தொழில் துறையினர் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் முகாமிட்டுள்ளனர். இன்று (28ம் தேதி) தொழில் துறையினர், விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில், மூன்றாம்கட்ட முத்தரப்பு பேச்சு நடைபெற உள்ளது.

''அதன் பின், ஒவ்வொரு பிரிவினரும் முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான தொழில் நுட்பத்தை சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பில் பின்பற்றுவது தொடர்பாகவும் முதல்வருடன் அதிகாரிகள் ஆலோசிக்க முடிவு செய்துள்ளனர்'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us