தி.மு.க.,வின் பள்ளி புறக்கணிப்பு போராட்டம் படுதோல்வி: முதல்வர் ஜெ.,
தி.மு.க.,வின் பள்ளி புறக்கணிப்பு போராட்டம் படுதோல்வி: முதல்வர் ஜெ.,
தி.மு.க.,வின் பள்ளி புறக்கணிப்பு போராட்டம் படுதோல்வி: முதல்வர் ஜெ.,

சென்னை: ''தமிழத்தில் மொத்தமுள்ள 47 லட்சத்து 88 ஆயிரத்து 624 மாணவ, மாணவியரில், 44 லட்சத்து 74 ஆயிரத்து 435 பேர் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.
அவரது அறிக்கை: சமச்சீர் கல்வி குறித்து அரசால் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு மனு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி, போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தி.மு.க., அழைப்பு விடுத்ததோடு, வகுப்புகளை மாணவ, மாணவியர் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய தி.மு.க.,வின் இந்த வற்புறுத்தலை புறக்கணித்து, தமிழகத்தில் மொத்தமுள்ள 47 லட்சத்து 88 ஆயிரத்து 624 மாணவ, மாணவியரில், 44 லட்சத்து 74 ஆயிரத்து 435 பேர் பள்ளிகளுக்கு வருகை புரிந்திருந்தனர். இதிலிருந்தே, தி.மு.க.,வின் இப்போராட்டம் படுதோல்வி அடைந்து விட்டது தெளிவாகிறது. திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் பூண்டி கலைவாணன் தூண்டுதலின் பேரில், கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வகுப்புக்கு செல்வது தடுக்கப்பட்டது. அங்கு, 153 மாணவர்கள் வகுப்பு சென்றனர் என்றும், அவர்களும் வகுப்பை விட்டு வலுக்கட்டாயமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் சிலர் வீடுகளுக்கு செல்ல வேளாங்கண்ணி - தஞ்சாவூர் அரசு பஸ்சில் பயணித்ததாகவும், மஞ்சக்கொல்லை என்ற இடத்தில் திருச்சியில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரியின் மீது அரசு பஸ் மோதி கால்வாயில் கவிழ்ந்ததாகவும், அதில் விஜய் என்ற மாணவன் மரணம் அடைந்தான் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மாணவன் விபத்தில் இறந்த செய்தியை அறிந்து, நான் மிகுந்த துயரம் அடைந்தேன். மாணவன் இறப்புக்கு காரணமான தி.மு.க.,வின் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தி.மு.க.,வினரின் இந்த தேவையற்ற போராட்டத்தால், அப்பாவி மாணவன் உயிர் பலியாகிவிட்டது. மாணவன் விஜயை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவன் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.