Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கெஜ்ரிவாலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

கெஜ்ரிவாலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

கெஜ்ரிவாலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

கெஜ்ரிவாலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

UPDATED : செப் 05, 2011 06:35 AMADDED : செப் 02, 2011 11:37 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி:அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோரை, பழிவாங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது' என, ஹசாரே தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.ஊழலுக்கு எதிராக, காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

இந்தப் போராட்டத்துக்கான ஏற்பாடுகள், அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை ஆகியவற்றில், சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கியப் பங்காற்றினார். இவர், இந்திய வருவாய்த் துறையில் பணியாற்றி, கடந்த 2006ல் ராஜினாமா செய்தார்.இந்நிலையில், ஹசாரே போராட்டம் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன், வருமான வரித் துறையிடம் இருந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அதில், 'நீங்கள் செலுத்த வேண்டிய 9.27 லட்ச ரூபாய் நிலுவைத் தொகையை, உடனடியாகச் செலுத்த வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.



இந்த விவகாரம், தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹசாரேவுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களைப் பழிவாங்கும் நோக்கத்துடன், இந்த நோட்டீசை மத்திய அரசு அனுப்பியுள்ளதாக, ஹசாரே தரப்பினர் கூறியுள்ளனர்.இதுகுறித்து, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், மோசமான தந்திரங்களை, அரசு செயல்படுத்துகிறது. கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் முதல் தேதியில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு, வருமானத்துடன் கூடிய விடுமுறை எடுத்தேன். 2002 நவம்பர் முதல் தேதியில் மீண்டும் பணியில் சேர்ந்தேன்.



விடுமுறை எடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், மீண்டும் பணியில் சேராவிட்டாலோ, ராஜினாமா செய்தாலோ, பணி ஓய்வு பெற்றாலோ, எனக்கு அளிக்கப்பட்ட சம்பளத்தை திரும்பச் செலுத்துவதாக, தெரிவித்து இருந்தேன். இதற்கிடையே, மீண்டும் பணியில் சேர்ந்த ஒரு ஆண்டில், வருமானம் இல்லாத விடுப்பு எடுத்தேன். இதற்கு, உயர் அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இந்நிலையில், 2006ல் பணியில் இருந்து ராஜினாமா செய்தேன். இதற்கு பின், ஒரு ஆண்டு வரை, அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, இது தொடர்பாக விளக்கம் கேட்டேன். ஆனால், அவர்கள் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.



தற்போது, திடீரென நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். என்னைப் பொறுத்தவரை, எந்த விதிமுறையையும் நான் மீறவில்லை.ஹசாரே உண்ணாவிரதம் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன், எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வருமான வரித்துறையினர், தங்களின் அரசியல் தலைவர்களின் உத்தரவில் பேரில், எனக்கு இந்த நோட்டீசை அனுப்பியுள்ளனர்.இவ்வாறு, அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.



இதுகுறித்து, அன்னா ஹசாரே கூறுகையில்,'அரவிந்த் கெஜ்ரிவால், சமூக நலனுக்காக, தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது வங்கிக் கணக்கில் பணமே இல்லை. ஆனால், அவருக்கு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், பல்வேறு வகையான போராட்டங்களை நடத்துவது குறித்து, சிந்திக்க வேண்டியிருக்கும்' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us