அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி
அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி
அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி
திருவாரூர் : திருவாரூர் அருகே கொரடாச்சேரியில், தி.மு.க.,வினர் நடத்திய போராட்டத்தால், அப்பாவி பள்ளி மாணவர் விபத்தில் சிக்கி பலியானார்.
தி.மு.க., மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணனின் சொந்த ஊரான கொரடாச்சேரியில் தி.மு.க.,வினர், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளை வலுக்கட்டாயமாகப் பள்ளியிலிருந்து அழைத்து வந்து, தஞ்சை- திருவாரூர் சாலையில் மறியல் செய்ய வைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவர்களை அப்புறப்படுத்தினர். மீண்டும் பள்ளி செல்ல முற்பட்ட மாணவ, மாணவியரை, தி.மு.க.,வினர் கட்டாயப்படுத்தி பஸ்சில் ஏற்றி, வீட்டுக்கு அனுப்பினர்.
திருவாரூரில் இருந்து தஞ்சை நோக்கிச் சென்ற அரசு பஸ்ஸில், அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றி விட்டனர். அந்த பஸ், நேற்று காலை 11 மணியளவில் கொரடாச்சேரி அடுத்த மஞ்சக்கொல்லை அருகே சென்ற போது, எதிரே ஜல்லி ஏற்றி வந்த லாரி மீது மோதியது. சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. விபத்தில், அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த, கிலேரியம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் விஜய்,13, என்ற மாணவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
மேலும், 16 பேர் படுகாயமடைந்து, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கொரடாச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவத்தைக் கண்டித்து, திருவாரூர் பஸ் ஸ்டாண்டில், அனைந்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்பாவி மாணவன் உயிர்ப் பலியாகக் காரணமான தி.மு.க.,வினரை கைது செய்ய வேண்டும், பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோஷங்கள் எழுப்பினர். மாவட்டச் செயலர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலர் அருள்ராஜன், இளைஞர் பெருமன்ற மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான பெற்றோர் பங்கேற்றனர்.