Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அரசியல் கட்சிகளால் முடங்கிய ஜெயங்கொண்டம் மின் திட்டம்

அரசியல் கட்சிகளால் முடங்கிய ஜெயங்கொண்டம் மின் திட்டம்

அரசியல் கட்சிகளால் முடங்கிய ஜெயங்கொண்டம் மின் திட்டம்

அரசியல் கட்சிகளால் முடங்கிய ஜெயங்கொண்டம் மின் திட்டம்

UPDATED : செப் 21, 2011 02:36 AMADDED : செப் 19, 2011 11:47 PM


Google News
Latest Tamil News
சென்னை :நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில், 18,184 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள, 1,600 மெகாவாட் திறன் கொண்ட ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின் திட்டம், பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது.

தேர்தல் வரும்போது மட்டும், பா.ம.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், இந்த மின் திட்டப் பிரச்னையை கையில் எடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

மத்திய பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அங்குள்ள 20 கிராமங்களில், பூமிக்கடியில், மிகக் குறைந்த ஆழத்தில் பழுப்பு நிலக்கரி இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, அங்கு மெகா நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கவும், அதன் அருகிலேயே, தலா 800 மெகாவாட்டில் இரண்டு யூனிட்டுகள் கொண்ட 1,600 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம் உருவாக்கப்பட்டது. வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில், இரண்டு சுரங்கங்கள் அமைக்க முடிவானது.



15 ஆயிரம் ஏக்கர் :ஜெயங்கொண்டத்தைச் சுற்றி மேலூர், புதுக்குடி, தண்டலை, களத்தூர், பெரியவளையம், தேவிமங்களம், புறஞ்சேரி உள்ளிட்ட 20 கிராமங்களில், 22 ஆயிரம் பேரிடம், 9,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதுதவிர, அரசின் புறம்போக்கு இடங்கள், 1,000 ஏக்கர் கைப்பற்றப்பட்டன. மேலும், 15 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.நில உரிமையாளர்களுக்கு, அரசு மதிப்பீட்டு விலையாக ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்பட்டது. ஆனால், நில உரிமையாளர்களுக்கு வேறு சலுகைகள் வழங்க, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் முன்வரவில்லை. நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினருக்கு, அரசு வேலை தருவதாக வாக்குறுதி அளித்து, அதற்கான நடவடிக்கைகள் தாமதமாகின.இந்த நிலையில், தமிழக மின் வாரியத்துடன் இணைந்து, ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி மின் நிலையம் அமைக்க, முந்தைய தி.மு.க., ஆட்சியில் முடிவானது.



இதையொட்டி, ஜெயங்கொண்டத்தை புதிய நகரப்பஞ்சாயத்து அந்தஸ்துக்கு மாற்றி, அங்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடிவானது. மின் நிலையத்திற்கு ஒத்துழைப்பு தருவோருக்கு, வீடு கட்ட இலவச நிலம் வழங்கவும் உறுதியளிக்கப்பட்டது.இதன் முதற்கட்ட நடவடிக்கையாக ஜெயங்கொண்டத்தில், புதிய வங்கி கிளைகள் திறக்கப்பட்டன. சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில், 2,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அங்கு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



இதுகுறித்து, என்.எல்.சி., நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில், நிலக்கரி பற்றாக்குறை உள்ள நிலையில், வரப்பிரசாதமாக, நாட்டின் மொத்த இருப்பில், 80 சதவீத பழுப்பு நிலக்கரி தமிழகத்தில் உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையையும், நிலக்கரி பற்றாக்குறையையும் சமாளிக்க, பழுப்பு நிலக்கரி மூலம் மின் திட்டங்கள் துவங்கலாம்.அதற்காக ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் மின் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அரசியல்வாதிகளின் தூண்டுதலால், மக்களின் ஒத்துழைப்பு சரியாகக் கிடைக்கவில்லை. மாநில அரசும் நிலமெடுக்க போதிய உதவி தரவில்லை. இதனால், 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கிடைத்தாலும், இன்னும் திட்டத்தை அமல்படுத்த உரிய சாத்தியக் கூறுகள் இல்லை. நிலங்களை உரிமையாளர்களே வைத்துள்ளனர்.இது தொடர்பாக, 7,100 வழக்குகள் சிறப்பு கோர்ட்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் முடிந்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இதற்கு மாநில அரசு தலையிட்டு, உரிய ஒத்துழைப்பு பெற்றுத் தந்தால், விரைவில் திட்டம் அமலாகும்.இவ்வாறு அவர் கூறினார்.



தி.மு.க.,பா.ம.க.,வால் திட்டம் பாதிப்பு? ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின்திட்டத்திற்கு, எடுக்கப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடும், சலுகைகளும் கிடைக்கவில்லை. இதை சரிசெய்ய, என்.எல்.சி., நிர்வாகம், உரிய நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், கடந்த காலத்தில், பா.ம.க., நிர்வாகிகள் குரு மற்றும் வேல்முருகன் ஆகியோரது தலைமையிலும், தமிழர் நீதிக்கட்சி சுப.இளவரசன் தலைமையிலும், திட்டப்பணிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. முடிவில், 7,100 நிலப் பிரச்னை வழக்குகள் குவிந்ததால், தமிழக அரசின் உத்தரவுப்படி ஜெயங்கொண்டத்தில், இரண்டு சிறப்பு கோர்ட்கள் அமைக்கப்பட்டு, இன்று வரை விசாரணை நடந்து வருகிறது.ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், அரசியல் கட்சிகளுக்கு உள்ளூரில் நெருக்கடி ஏற்படும்போதும், ஜெயங்கொண்டம் மின் திட்டப் பிரச்னையை மையப்படுத்தி, அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதும், பின், அதை மறந்துவிட்டு, வேறு அரசியல் நடவடிக்கைகளின் பக்கம் திரும்புவதுமாக செயல்படுகின்றன.



கடந்த காலங்களில், பா.ம.க.,வும், தமிழர் நீதிக்கட்சியும், அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க.,வும் கூட, கண்துடைப்பு போராட்டங்களை அவ்வப்போது நடத்தியுள்ளன. தி.மு.க.,வை பொறுத்தவரை, மற்ற கட்சிகளால் எல்லாம் முடங்கியது என்ற குற்றச்சாட்டுகளுடன், ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காமலும், உரிய இழப்பீடு பெற்றுத்தராமலும், தூரமாக நின்று நிலைமையை வேடிக்கை பார்த்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறுகின்றனர்.



அரசும், அரசியல்வாதிகளும் நினைத்தால், எந்த ஒரு திட்டத்தையும் முடக்கவும் செய்யலாம், முடிக்கவும் செய்யலாம் என்பதற்கு, இந்த திட்டம் எடுத்துக்காட்டாகும். அரசியல்வாதிகளின் சுயநலனால், 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இழந்த மக்கள், பட்டாவை கொடுத்து விட்டு, நிலத்தை மட்டும் பார்த்துக் கொண்டு பரிதாபமாக கோர்ட் படிகளில் ஏறி, இறங்குகின்றனர். என்.எல்.சி., நிறுவனமோ, குறைந்தபட்ச பணம் தானே கொடுத்துள்ளோம் என, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது.முந்தைய தி.மு.க., அரசு இந்த பிரச்னையில், சரியான நடவடிக்கை எடுக்காத நிலையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசாவது உதவி செய்து, ஜெயங்கொண்டம் மின் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்குமா? 7,000 வழக்குகளை விரைவில் முடித்து, உரிய இழப்பீடு மற்றும் சலுகைகள் வழங்குமா? பல ஆயிரம் கோடி அரசுக்கு லாபத்தை தரும் திட்டம், தூசி தட்டப்பட்டு அமலுக்கு வருமா? என பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கான நம்பிக்கை ஒளியை ஏற்ற, புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, அரியலூர் மக்கள் காத்திருக்கின்றனர்.



பழுப்பு நிலக்கரியால் லாபம் பல கோடி : ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் மின்திட்டத்தை, திட்டமிட்டபடி கொண்டு வந்தால், 2015ல், 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி, அதில், 900 மெகாவாட் வரை தமிழகத்திற்கு பங்காக கிடைக்கும். இதனால், தமிழக மின் வாரியம், தனியாரிடம் வாங்கும் மின்சாரத்திற்கான தொகை, கோடிக்கணக்கில் மீதமாகும்.புதிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு போதுமான மின்சாரம் கிடைத்து, தொழில் வளர்ச்சியடையும். தற்போது, மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிலக்கரியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பல புதிய மின் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நடைமுறையில் இருக்கும் மின் திட்டங்களுக்கு, இந்தோனேஷியாவில் இருந்து அதிக விலை கொடுத்து, நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்தால் திட்டம் லாபகரமாக இருக்காது. இதன் காரணத்தால், புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் துவங்க ஒப்புக்கொண்ட பெரிய கம்பெனிகள் இப்போது திட்டத்தை துவங்காமல் ஆறப்போட்டுள்ளன. மின் உற்பத்தி அதிகமானால் தான், மக்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்; புதிய தொழில்கள் துவங்க முடியும். வெளிநாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து மின் உற்பத்தி செய்தாலும், எண்ணெய் விலை ஏற்றத்தால் நஷ்டம் ஏற்படும். மின் உற்பத்தியை பழுப்பு நிலக்கரி மூலம் அதிகப்படுத்தினால், தமிழகம் முழுவதும் மின்சார ரயில்களை இயக்கலாம். ரயிலை இயக்க டீசல் தேவையில்லை. இதனால், அன்னிய செலாவணி மிச்சமாகும்.அணுமின் நிலையங்களுக்கு இப்போது எதிர்ப்புத் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், மாற்று உற்பத்திக்கு வழி சொல்லவில்லை. அவர்களது திட்டம் தமிழகத்தை இருண்ட காலத்துக்கு எடுத்துச் செல்லும். இளைஞர்கள் தமிழகத்தில் வேலை இல்லாமல் வெளிநாடுகளுக்கும், குஜராத் போன்ற மாநிலங்களுக்கும் வேலை தேடிச் செல்லும் அவலநிலை ஏற்படும். இதற்கு, தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.பழுப்பு நிலக்கரி திட்டம் வந்தால், இறக்குமதி தேவை குறைவதுடன், பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தும் வகையிலான புதிய மின் திட்டங்களை அதிக அளவில் கொண்டு வரமுடியும்.



தமிழகத்தில் முடங்கிய மின்திட்டங்கள் :உடன்குடி அனல் மின் திட்டம்: தமிழக மின்வாரியமும், பாரத மிகுமின் கழகமும் இணைந்து, உடன்குடியில், 1,600 மெகாவாட்டில், 9,083 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உடன்குடியில், அனல்மின் நிலையம் அமைக்க நான்காண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. மத்திய அரசிடமிருந்து, நிலக்கரி கிடைக்காமை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதியளிக்காதது போன்ற காரணங்களால், இத்திட்டம் முடங்கி கிடக்கிறது.குந்தா நீரேற்று மின் திட்டம்: நீலகிரி மாவட்டத்தில் குந்தா நதியின் குறுக்கே, அவலாஞ்சி மற்றும் எமரால்டு ஆகிய இரண்டு அணைகளுக்கு மத்தியில், நான்கு யூனிட்கள் கொண்ட, 500 மெகாவாட் நீரேற்று மின்திட்டம், 500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க முடிவானது. 1955ல், திட்ட முதற்கட்ட பணிகள் துவங்கி, 2007ல் பணிகள் துவங்குவதாக இருந்தது.ஆனால், மத்திய நதிநீர் ஆணையம், காவிரி நதி பிரச்னையை காரணம் காட்டி, காவிரி நதி நீர் ஆணையம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடம், தடையில்லா சான்று வாங்க உத்தரவிட்டது. இதனால், இத்திட்டம் முடங்கியுள்ளது.மேட்டூர் நீரேற்று மின்திட்டம்: மேட்டூரில் தற்போதுள்ள அணைக்கு மேலே, மற்றொரு அணையை கட்டி, 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய, கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. ஆனால், மலையில், புதிய அணை கட்டுவதிலும், காவிரி பிரச்னை இருப்பதாலும் திட்டம் முடங்கி விட்டது.இதுதவிர, 600 மெகாவாட் உற்பத்தி செய்யவுள்ள எண்ணூர் விரிவாக்க அனல்மின் நிலைய திட்டம், 1,600 மெகாவாட் உற்பத்தி செய்யும், வடசென்னை நான்காவது அனல்மின் திட்டம் ஆகியனவும், நிலக்கரி அனுமதி இல்லாமல் முடங்கி கிடக்கின்றன. மேலும், காற்றாலைகளுக்கு மத்திய அரசு மானியம் தருவதில்லை. சூரியமின் தியை ஊக்குவிக்க, 40 சதவீத மானியம் மட்டுமே கிடைப்பதால், பெரிய அளவிலான முதலீடு செய்ய முடியாமல், சூரிய மின்உற்பத்தி திட்டங்கள் மந்த நிலையில் உள்ளன.



முடங்காமல் இருக்க போராடும் திட்டம் : கூடங்குளம் அணு மின் திட்டம்: கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இத்திட்டப்படி, ஒரே நேரத்தில், 2,000 மெகாவாட் உற்பத்தி செய்ய முடியும்.பல பிரச்னைகளை தாண்டி, கூடங்குளம் மின் நிலைய மின் உற்பத்தி பணிகள், அடுத்தமாதம் துவங்கவுள்ள நிலையில், இத்திட்டத்தையும் முடக்க போராட்டங்கள் நடக்கின்றன. 16 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து, பல கட்ட முயற்சிகளை செய்து, சர்வதேச பிரச்னைகளை சரி செய்து, பணிகளை முடித்து, மின் உற்பத்தி துவங்க தயார் நிலையில் உள்ள இத்திட்டத்தை, எப்படியும் முடக்குவோம் என்ற போராட்டம் நடந்து வருகிறது.இது, தமிழக மற்றும் மத்திய மின்துறையை ஏமாற்றமடைய செய்துள்ளது. இதனால், எதிர்காலத்தில், தமிழகத்திற்கு தேசிய மற்றும் சர்வதேச திட்டங்கள் வருமா என்ற கேள்விக்குறியை உருவாக்கியுள்ளது.



மாநில அரசு நினைத்தால் திட்டம் நடக்கும் : ஜெயங்கொண்டம் மின் திட்டம் தற்போதைய நிலையில் சாத்தியமா என்பது குறித்து, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின், பெயர் வெளியிட விரும்பாத உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:என்.எல்.சி., நிறுவனத்தை பொறுத்தவரை, தமிழகத்தில், மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய திட்டங்களை நிறைவேற்ற தயாராக உள்ளது. ஆனால், ஜெயங்கொண்டம் மின் திட்டத்தில், கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்கள் கேட்கும் சந்தை விலையை தருவதில் சிக்கல் உள்ளது. மேலும், கைப்பற்றப்பட்ட நிலத்தை, இதுவரை நெய்வேலி நிறுவனத்திடம், அரசு ஒப்படைக்கவில்லை. இப்பணிகளை தமிழக தொழிற்துறை (டிட்கோ) மேற்கொண்டது.

கைப்பற்றப்பட்ட நிலங்கள், தமிழக தொழிற்துறையிடம் தான் உள்ளன. கடந்த காலங்களில், அந்த நிலத்தை நெய்வேலி நிறுவனத்திடம், மாநில அரசு ஒப்படைக்கவில்லை. இதுதவிர, தற்போது கைவசம் உள்ள நிலத்தில், திட்டத்தை துவங்குவதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பு அவசியம்.



நிலத்தை ஒப்படைப்பது மட்டுமின்றி, ஜெயங்கொண்டம் பகுதியில், இடமாற்றம் செய்யப்படும் மக்களுக்கான வாழ்வாதாரங்களை அமைத்து தர வேண்டும். மக்களுக்கு மாற்று குடியிருப்புகள், வேலைவாய்ப்பு, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். குறைந்த பரப்பளவில், பழுப்பு நிலக்கரி வெட்டியெடுத்து, மின் நிலையம் அமைத்தாலும், பிற்காலத்தில், அதையொட்டிய நிலங்களும் தேவைப்படும். எனவே, மாநில அரசு தன் மின்சார தேவையை சரிகட்ட, இத்திட்டம் தேவையென்று கருதினால், எங்களுடன் ஒத்துழைக்க வேண் டும்.கடந்த காலத்தில், மாநில அரசின் ஒத்துழைப்பு கிடைக்காததால், தொடர்ந்து இத்திட்டம் கிடப்பில் உள்ளது. இதனால், என்.எல்.சி.,க்கு எந்த நஷ்டமும் கிடையாது. மொத்தத்தில், இத்திட்டத்தை பொறுத்தவரை, மாநில அரசு நினைத்தால், எப்படி வேண்டுமானாலும் நிறைவேற்றலாம்.இவ்வாறு அவர் கூறினார்.



திட்டம் வந்தாலும் தண்ணீர் இல்லை :ஜெயங்கொண்டம் திட்டத்தை, என்.எல்.சி., நிறுவனம் துவங்க முயற்சித்தாலும், அனல்மின் நிலையம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கு மின்நிலையம் அமைத்தால், கொதிகலனை குளிர்விக்க அதிகளவு தண்ணீர் தேவைப்படும். இதற்கு முதலில், காவிரி நதியின் கடைமடை பகுதியான கொள்ளிடத்தில் தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.ஆனால், காவிரி நதி நீர் ஆணைய பிரச்னை இருப்பதால், கொள்ளிடத்திலும் தண்ணீர் எடுப்பதில் சிக்கல் உள்ளது. இதனால், கடலில் இருந்துதான் தண்ணீர் எடுக்க வேண்டும்.அதற்கு, கடலூர் மாவட்டம், பரங்கிபேட்டை அருகிலிருந்து, ஜெயங்கொண்டத்திற்கு குழாய்கள் பதித்து, தண்ணீர் கொண்டு வர வேண்டும். இதற்கு மத்திய அரசின் கடற்பாதுகாப்பு துறை, சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற வேண்டியுள்ளது.



நிலப் பிரச்னையை தீர்க்க இப்படியும் ஒரு தீர்வு : நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை பொறுத்தவரை, முதல் சுரங்கம் 7,413 ஏக்கர், விரிவாக்க சுரங்கம் 3,706 ஏக்கர், இரண்டாம் சுரங்கம் மற்றும் விரிவாக்க சுரங்கம் 14,826 ஏக்கர், நெய்வேலி நகரப் பகுதி 7,907 ஏக்கர் பரப்பளவுகளில் உள்ளன. இதேபோல், நான்கு அனல் மின் நிலையங்கள், 12,350 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.மொத்தமாக பார்த்தால், நெய்வேலியில் நான்குசுரங்கங்கள், நான்கு அனல் மின் நிலையங்கள் ஆகியன, 46 ஆயிரம் ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளன. இந்த இடத்தில், இன்னும் கூடுதல் அனல் மின் நிலையமும் வரவுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இவற்றில் இருந்து 2,790 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டுள்ளது; இதில் சராசரியாக 2,300 மெகாவாட் வரை உற்பத்தியாகிறது; தமிழகத்திற்கு சராசரியாக 850 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது.



இந்நிலையில், ஜெயங்கொண்டம் திட்டத்திற்கு, 10 ஆயிரம் ஏக்கர் கைப்பற்றப்பட்ட நிலையில், இன்னும் தேவைப்படும் 5,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, முதற்கட்டமாக இரண்டு சுரங்கங்கள், இரண்டு அனல் மின் நிலையங்களை துவங்க முடியும்.தொழிலாளர்கள் வசிப்பதற்கான நகரப்பகுதியை, சுரங்கப்பகுதியை விட்டு சற்று தொலைவில் அமைக்கலாம். அங்கிருந்து சுரங்கப்பகுதிக்கு அவர்கள் வந்து செல்லும் வகையில், போக்குவரத்து வசதியை செய்து தந்தால், தொழிலாளர்கள் எளிதாக வந்து செல்வர். திட்டத்தை துவங்குவதற்கு தற்போது தடையாக நிலப் பிரச்னை உள்ள நிலையில், 'டவுன்ஷிப்'பிற்கு தேவையான நிலத்தின் அளவு இதன் மூலம் குறையும்.



எனவே, தமிழக அரசும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து, அரசியலாகும் போராட்டங்களை மாற்றி, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, மத்திய, மாநில அரசுகளின் இணக்கம் தேவையானது. இரு தரப்பிலும், 'ஈகோ' பார்க்காமல், நடவடிக்கைகளில் இறங்கினால், தமிழகம் எதிர்கொள்ளும் மின் பற்றாக்குறைக்கு, முதற்கட்டமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து, நிலைமையை சமாளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.



-நமது சிறப்பு நிருபர்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us