நில அபகரிப்பு விசாரணையில் கட்டப்பஞ்சாயத்து: போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எப்போது?
நில அபகரிப்பு விசாரணையில் கட்டப்பஞ்சாயத்து: போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எப்போது?
நில அபகரிப்பு விசாரணையில் கட்டப்பஞ்சாயத்து: போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எப்போது?
கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நில அபகரிப்பு மற்றும் நில மோசடி தொடர்பான புகார்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளாமல்,போலீஸ் அதிகாரிகளில் சிலர் கட்டப்பஞ்சாயத்து நடத்தி முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நில அபகரிப்பு தொடர்பான புகார்களை, மாநகர போலீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் தோறும் ஏற்படுத்தப்பட்டுள்ள 'நில அபகரிப்புக்கு எதிரான விசாரணைப்பிரிவு' விசாரிக்கிறது.
நில அபகரிப்பு புகார் அளித்தோரையும், குற்றம்சாட்டப்பட்ட நபர்களையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து நடத்தி, பிரச்னைகளை 'செட்'டில் செய்து 'வருமானம்' பார்த்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ததும், சம்பந்தப்பட்ட 'எதிரி'களுக்கு தகவல் தெரிவித்து உஷார் படுத்தி தலைமறைவாகச் செய்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், முக்கிய நபர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும்போது, ரகசியம் காக்க அதிகாரிகள் படாதபாடு படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை பொருத்தவரை நில அபகரிப்பு புகார்களின் மீதான விசாரணையை தீவிரப்படுத்த எஸ்.பி., உமா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதேவேளையில் கூடுதல் எஸ்.பி., மற்றும் இரு டி.எஸ்.பி.,கள், இரு இன்ஸ்பெக்டர்களின் செயல்பாடு மீது சக போலீஸ் அதிகாரிகளே அதிருப்தி தெரிவித்துள்ளனர். திருப்பூரிலும் டி.எஸ். பி., உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் மீது போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. நில அபகரிப்புக்கு எதிரான புகார்களின் மீது சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தி காரணமாக சமீபத்தில் சேலம் மாநகர போலீஸ் அதிகாரிகள் பலரும் கூண்டோடு மாற்றப்பட்டனர். எஸ்.பி., ஒருவர் 'பட்டாலியன் போலீசுக்கு' தூக்கியடிக்கப்பட்டார். இந்நிலையில் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மீதும் அதிருப்தியும், புகாரும் எழுந்துள்ளதால் விரைவில் 'களையெடுப்பு' நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் வாய்ப்புள்ளது.
'யாராக இருப்பினும் நடவடிக்கை': தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி. வன்னியபெருமாள் கூறியதாவது: 'நில அபகரிப்பு தொடர்பான விசாரணை நேர்மையாகவும், சட்டப்படியாகவும் இருக்க வேண்டும்; விசாரணையில் தவறிழைக்கும், முறைகேட்டில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை மீறி செயல்பட்ட ஒரு இன்ஸ்பெக்டர், இரு எஸ்.ஐ.,கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரது முறை தவறிய செயல்கள் தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. தவறிழைக்கும் அதிகாரிகள் யாராக இருப்பினும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை பாயும். அதே வேளையில் நேர்மையாகவும், திறம்படவும் பணியாற்றும் போலீசார் கவுரவிக்கப்படுவர். நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை வாரம் ஒரு முறை மாவட்ட எஸ்.பி.,யும், 15 நாட்களுக்கு ஒரு முறை டி.ஐ.ஜி.,யும் ஆய்வு செய்கின்றனர். நான், 30 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து வழிகாட்டுதல் உத்தரவுகளை வழங்குகிறேன். எந்த ஒரு சூழலிலும் முறைகேடுகளுக்கு இடமளிக்கக்கூடாது என்ற உறுதியுடன் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு, ஐ.ஜி., வன்னியபெருமாள் தெரிவித்தார்.


