மின்பற்றாக்குறை, நிலத்தின் விலை அதிகரிப்பு தமிழக தொழிற்துறை கடும் பாதிப்பு
மின்பற்றாக்குறை, நிலத்தின் விலை அதிகரிப்பு தமிழக தொழிற்துறை கடும் பாதிப்பு
மின்பற்றாக்குறை, நிலத்தின் விலை அதிகரிப்பு தமிழக தொழிற்துறை கடும் பாதிப்பு
ADDED : செப் 01, 2011 12:09 AM
சென்னை : மின் பற்றாக்குறை, நிலத்தின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால், தொழில் துறை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2000-2010ம் ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, தென் மாநிலங்களின் பங்களிப்பு அதிகளவில் இருந்து வருகிறது. இந்தியாவின், மொத்த ஜி.டி.பி.,யில், தென் மாநிலங்கள், 22 சதவீதத்தையும், வேலை வாய்ப்பில், 28 சதவீதத்தையும் கொண்டுள்ளன. உற்பத்தி மற்றும் சேவை துறையின் வளர்ச்சியே இவற்றிற்கு முக்கிய காரணம். தென் மாநிலங்களில் வளர்ச்சி இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக மின்வெட்டு, நிலத்தின் விலை அதிகரிப்பு, திறன் வாய்ந்த பணியாளர் பற்றாக்குறை, மற்ற மாநிலங்களின் வியத்தகு சலுகைகள் போன்ற காரணங்களால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி படிப்படியாக பாதிப்படைந்து வருகிறது. தமிழகத்தில், 2007-10ம் ஆண்டுகளில், மின் உற்பத்தித் திறன், 5,600 மெகாவாட் என்ற அளவில் இருந்தது. அதன் பின், இதில் வளர்ச்சி இல்லை. அதேசமயம், இதன் தேவை ஆண்டுதோறும், 12 சதவீதமாக அதிகரித்து வருகிறது. இதே ஆண்டுகளில், நிலக்கரி மற்றும் எல்.பி.ஜி., விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இது, தொழில் துறையை வெகுவாக பாதித்துள்ளது. கடந்த, 2005-10ல், நாட்டின் ஜி.டி.பி., 8.7 சதவீதமாக உயர்ந்திருந்தாலும், மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில், 7.4 சதவீதமாக குறைந்துள்ளது. குஜராத், 11.3 சதவீதம், அரியானா, 11, பீகார், 9.6, கர்நாடகா, 8.5, கேரளா, 8.1, உத்தரகண்ட், 7.8 சதவீதம் என்ற அளவில் உள்ளது. தமிழகம், ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியில், 30 முதல், 35 சதவீத பங்களிப்பை கொண்டு, முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஜவுளி, 20 முதல், 25 சதவீதம், ரசாயனம் மற்றும் மருந்து, ஒன்று முதல், 5 சதவீதம், போக்குவரத்து, சரக்கு, நிதி சார் நடவடிக்கைகள் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில், 5 முதல், 10 சதவீதம், மின்சாரம் மற்றும் சில்லரை வர்த்தகம், 10 முதல், 15 சதவீதம், தகவல் தொழில்நுட்பம், 15 முதல், 20 சதவீதம் பங்களிப்பைக் கொண்டுள்ளன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், முதல்வர் ஜெயலலிதா, மின் வெட்டு பிரச்னையை தீர்க்க, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது, தொழில் நிறுவனங்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய, தமிழக அரசு, 'தொலைநோக்கு திட்டம்-2025' என்பதை கொண்டு வரும் என பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதில், அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க, தெளிவான திட்டங்கள் மற்றும் தொழில் துவங்குவதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கும் நடைமுறைகள் இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தொழில் துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. திறன் வாய்ந்த மனிதவளம், அமைதியான தொழில் சூழல் மற்றும் துறைமுக வசதி போன்றவற்றால், முதலீடுகளுக்கு மிகவும் சாதகமான மாநிலமாக தமிழகம் திகழ்வதால், உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகளவில், தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதன் மூலம், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். இதுகுறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் (தமிழகம்) என்.கே.ரங்கநாத் கூறியதாவது: சில ஆண்டுகளாக, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, தமிழகத்தின் வளர்ச்சி குறைந்ததற்கு, மின் பற்றாக்குறையே காரணம். தமிழகத்தில் மின் பற்றாக்குறையை போக்க, முதல்வர் ஜெயலலிதா, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இது, சோர்வடைந்திருந்த தொழில்துறையினர் மத்தியில், உற்சாகத்தை கொடுத்துள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, தமிழகத்தில் நிலத்தின் விலை அதிகமாக உள்ளது. இதை குறைக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ரங்கநாத் கூறினார்.
வீ.அரிகரசுதன்