மீனவரை கொலை செய்து கடலில் வீசிய இரு வாலிபர் கைது: மாஜி அமைச்சர் தம்பிகள் தலைமறைவு
மீனவரை கொலை செய்து கடலில் வீசிய இரு வாலிபர் கைது: மாஜி அமைச்சர் தம்பிகள் தலைமறைவு
மீனவரை கொலை செய்து கடலில் வீசிய இரு வாலிபர் கைது: மாஜி அமைச்சர் தம்பிகள் தலைமறைவு

சென்னை : ஐந்தாண்டுகளுக்குமுன் மாயமான, இரண்டு மீனவர்கள் கொலை செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில்,ஆக.,10 ல் செல்லத்துரை மனைவி பிரேமாவதி, வேலுவின் மனைவி வள்ளியும், சென்னை போலீஸ் கமிஷனரைச் சந்தித்து, தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதில்,'எங்கள் கணவர்களை, மாஜி அமைச்சர் சாமி தூண்டுதலால், அவரது சகோதரர்கள், அடியாட்கள் அடித்து இழுத்துச் சென்றுள்ளதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தனர்.
இதுகுறித்து,தனிப்படை போலீசார் விசாரித்து, கே.வி.கே.குப்பம் டைசன், 21, சுந்தரம், 40, இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மாயமான மீனவர் செல்லத்துரையை, அமைச்சர் தம்பிகளுடன் சேர்ந்து, கடத்திக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். கொலைக்கான பின்னணி: சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு உதவித் தொகைகள் குவிந்தன. கே.வி.கே.குப்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் கிடைத்தது. கிராம தலைவராக இருந்த முன்னாள் அமைச்சரின் தம்பி, கே.பி.பி.சங்கர் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சாமி கோஷ்டிக்கும், அ.தி.மு.க., பிரமுகர் அஞ்சப்பன் கோஷ்டிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் சாமியும் சிக்குகிறார்: கைதான டைசன், சுந்தர் இருவரும் விசாரணையின்போது,'அமைச்சர் சாமியின் தம்பிகள் சங்கர், சொக்கலிங்கம் மற்றும் பலர் செல்லத்துரையை புதுச்சேரிக்கு கடத்திச் சென்று, தமிழகம், புதுச்சேரி எல்லைப் பகுதியில் உள்ள காலாப்பட்டு, முக்கூடல் பகுதியில் கொலை செய்து, கடலில் வீசினர்' என, வாக்குமூலத்தில், தெரிவித்துள்ளனர். கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் சாமியின் தம்பிகள் சங்கர், சொக்கலிங்கம், அவரது அடியாட்கள் யோபு, குமார், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது போலீசார் கொலை வழக்கு பதிந்து,தேடி வருகின்றனர். அவர்கள் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில், கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியும் கைது செய்யப்படக்கூடும் என தெரிகிறது.
கைதுக்கு முன்பே பரபரப்பு
மீனவர் செல்லத்துரை கொலை வழக்கில், முன்னாள் அமைச்சர் சாமியை போலீசார், இரவில் எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்ற தகவல் வேகமாக பரவியது. வீட்டின் முன் வழக்கத்தை விட போலீசார் அதிகப்படுத்தப்பட்டனர். இதையறிந்து, அவரது ஆதரவாளர்கள், கட்சியினர் அவரது வீட்டின் முன் குவிந்தனர். சாமி உள்ளிட்டோர் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கைது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், அவரது ஆதரவாளர்கள் அதிகாலையில் கலைந்து சென்றனர்.