படிப்படியாக பாதுகாப்பு பலப்படுத்தப்படும்:ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் பேட்டி
படிப்படியாக பாதுகாப்பு பலப்படுத்தப்படும்:ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் பேட்டி
படிப்படியாக பாதுகாப்பு பலப்படுத்தப்படும்:ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் பேட்டி
சென்னை:சென்னை ஐகோர்ட்டில், நேற்று பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தாலும், பலத்த சோதனை, கெடுபிடி என எதுவும் இல்லை.
சென்னை ஐகோர்ட் நுழைவு வாயிலில், வழக்கம் போல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வழக்கறிஞர்களுக்கான ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை, ஐகோர்ட் வளாகத்துக்குள் போலீசார் அனுமதித்தனர். வெளியில் இருந்து வரும் வாகனங்களையும் அனுமதித்தனர். ஆனால், அந்த வாகனங்களின் எண்களை குறித்துக் கொண்டனர். கோர்ட் ஹாலுக்குள்ளும் வழக்குத் தொடுத்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கெடுபிடி எதுவும் இல்லை.மாலை நான்கு மணியளவில், திடீரென தலைமை நீதிபதி இக்பால், ஐகோர்ட் வளாகத்தில் அதிரடியாக ஆய்வு செய்தார். ஆவின் கேட் அருகில் வந்தார். அவருடன் பதிவாளர் ஜெனரல் விமலா மற்றும் பதிவாளர்கள் வந்தனர். அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரிடம், பாதுகாப்பு நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்கிறீர்கள் என, தலைமை நீதிபதி கேட்டார்.
கோர்ட்டுக்குள் வரும் வாகனங்களின் எண்கள், எந்த வாகனம் என குறிப்பெடுத்து வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அந்தப் பதிவேட்டை தலைமை நீதிபதியிடம் காட்டினர். இந்த வாகனங்களில் யார் வந்தது, உரிமையாளர் யார், எதற்காக வந்தனர் என விசாரித்தார். அதற்கு போலீசார், காலை 10.30 மணியளவில் வாகனங்கள் வரிசையாக வருவதால், ஒவ்வொருவரையும் நிறுத்தி விசாரிப்பது கஷ்டமாக உள்ளது என்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி, தலைமை நீதிபதி இக்பால் கூறியதாவது:
ஐகோர்ட்டில் நேற்று எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் பணியை செய்கிறோம். பாதுகாப்புக்குப் போதிய போலீசை நிறுத்துவது அவர்களின் பணி. படிப்படியாக அனைத்தும் நிறைவேற்றப்படும். போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளை விவாதிப்போம்.இவ்வாறு தலைமை நீதிபதி இக்பால் கூறினார்.