Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மணல் அள்ள குண்டேரிப்பள்ளம் நீர் வெளியேற்றம்?

மணல் அள்ள குண்டேரிப்பள்ளம் நீர் வெளியேற்றம்?

மணல் அள்ள குண்டேரிப்பள்ளம் நீர் வெளியேற்றம்?

மணல் அள்ள குண்டேரிப்பள்ளம் நீர் வெளியேற்றம்?

ADDED : ஜூலை 12, 2011 12:40 AM


Google News

கோபிசெட்டிபாளையம் : மணல் எடுப்பதற்காக குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோபி கொங்கர்பாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. குன்றி, விலாங்கோம்பை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் குண்டேரிப்பள்ளம் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. குண்டேரிபள்ளம் அணையின் மொத்த கொள்ளளவு 42 அடி. மழை நீரை மட்டுமே நம்பி இவ்வணை உள்ளது. 2,600 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடலை, எள் போன்றவை அதிகளவில் பயிராகிறது. அணையில் 10 நாட்களுக்கு ஒரு முறை என்ற விகிதத்தில், 50 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. நடப்பாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டு கோடையில் ஓரளவு மழை பெய்ததன் எதிரொலியாக, குண்டேரிபள்ளத்தில் சென்ற மே மாதம் 39 அடி தண்ணீர் இருப்பு இருந்தது. மே மாதம் அணையின் இடது கரை 'ஷட்டர்' பழுதானது. எமர்ஜென்ஸி ' ஷட்டர்' மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக 39 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நடப்பு வாரம் 26 அடியாக குறைந்தது. இரண்டு நாட்களுக்கு முன் எமர்ஜென்ஸி ஷட்டர் உடைந்து வாய்க்காலில் தண்ணீர் வெளியேறியதாகவும், ஷட்டர் பழுது பார்க்க பொள்ளாச்சியில் இருந்து தொழில் நுட்ப குழுவினர் வருவதாக பொதுப்பணி துறையினர் தெரிவிக்கின்றனர். குண்டேரிப்பள்ளம் அணையில் சென்ற 10 ஆண்டுக்கு முன் மணல் எடுக்க அனுமதிக்கப்பட்டது. அதற்கு பிறகு மணல் எடுக்கவில்லை. அணையின் மேற்பகுதியில் மணல் குவிந்து கிடக்கிறது. தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து மணல் எடுப்பதற்காக அணையில் இருந்த தண்ணீரை பொதுப்பணி துறையினரே வெளியேற்றியதாக புகார் எழுந்துள்ளது. அப்பகுதியினர் கூறியதாவது: குண்டேரிப்பள்ளம் அணையில் சென்ற பத்து ஆண்டுக்கு முன் மணல் எடுக்கப்பட்டது. அதன் பின், அனுமதி மறுக்கப்பட்டதால், மணல் எடுப்பது நிறுத்தப்பட்டது. ஆற்றுப்பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தல் நடக்கிறது. விளாங்கோம்பை செல்லும் சாலை வழியாக சென்றால் குண்டேரிப்பள்ளம் அணையின் மேல் பகுதி வந்து விடும். சாலை வசதி உள்ளதால் மணல் எடுக்க வாகனங்கள் சுலபமாக செல்ல முடியும். குண்டேரிப்பள்ளம் அணையில் 2,000 லோடு மணல் தேங்கி உள்ளது. மணலை எடுக்கவே அணையில் இருந்து 26 அடிவரை தண்ணீரை பொதுப்பணித் துறையின் திறந்து விட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டால் பல மாதங்களுக்கு அணை வறண்டு கிடக்கும். இப்பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். யானை, காட்டு எருமை, மான் போன்ற வன விலங்குகள் தண்ணீர் கிடைக்காமல் ஊருக்கும் புகுந்து விடும். பொதுப்பணி துறையின் அலட்சியப்போக்கால் பல்வேறு பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us